2017-03-31 15:54:00

பாப்பிறை இல்லத்தவருக்கு வழங்கப்பட்ட தவக்கால மறையுரை


மார்ச்,31,2017. "நாம் கேட்டறிந்தவை, உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு" (லூக்கா நற்செய்தி 1:4), தெளிவான உண்மைகளை, பிறருக்கு வழங்கும் நோக்கத்துடன், கிறிஸ்துவின் உயிர்ப்பு என்ற மறையுண்மையை அறிந்துகொள்வது முக்கியம் என்று, பாப்பிறை இல்ல மறையுரையாளர், இவ்வெள்ளி காலையில் மறையுரை வழங்கினார்.

பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளராகப் பணியாற்றும், அருள்பணி Raniero Cantalamessa அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட, பாப்பிறை இல்லத்தைச் சார்ந்த அனைவருக்கும், இவ்வெள்ளி காலை வழங்கிய தவக்கால மறையுரையில் இவ்வாறு கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தில் மறையுரைகள் வழங்கிவரும் அருள்பணி Cantalamessa அவர்கள், இவ்வாண்டுக்கென வழங்கிய நான்காவது மறையுரையில், கிறிஸ்துவின் உயிர்ப்பு, மற்றும், நம் உயிர்ப்பு, ஆகிய மறையுண்மைகளை மையப்படுத்தி, தன் சிந்தனைகளை வழங்கினார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பை, ஒரு வரலாற்று நிகழ்வாக, திருத்தூதுப் பணிக்கு பொருள் தருவதாக, ஆழ்நிலை தியானத்தின் மறைப்பொருளாக எவ்விதம் காண முடியும் என்ற மூன்று கருத்துக்களில், அருள்பணி Cantalamessa அவர்கள், தன் சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார்.

உயிர்ப்பு வழியே நாம் அடையவிருக்கும் மறுவாழ்வைக் குறித்து, வெறும் சிந்தனையளவில் முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதில், அந்த வாழ்வை அடைவதற்கு, இவ்வுலக வாழ்வில், செயல்வடிவில் முயற்சிகள் மேற்கொள்வதே சிறந்தது என்று, அருள்பணி Cantalamessa அவர்கள், தன் தவக்கால மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.