2017-04-06 16:15:00

இறைவனின் கொடைகளை அசைபோட அழைக்கும் திருத்தந்தை


ஏப்.,06,2017. தீமைகள் நம்மைச் சூழும்போது, இறைவனின் பற்றுறுதியை நினைவு கூர்ந்தால், நம்மால் மகிழமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

ஆபிரகாமுக்கு இறைவன் வழங்கிய வாக்குறுதியைப் பற்றிக் கூறும் தொடக்க நூல் வாசகத்தை மையப்படுத்தி, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலியில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம் ஒவ்வொருவரின் வாழ்விலும், இறைவனின் வாக்குறுதிகள் கொணர்ந்துள்ள அழகை தியானிப்பது நல்லது என்று கூறினார்.

100 வயது நிறைந்த ஆபிரகாம், பிள்ளைப்பேறு அற்ற மனைவி என்ற சூழலில், அவருக்கு ஒரு மகன் பிறப்பான் என்று இறைவன் கூறியதை, ஆபிரகாம் நம்பினார் என்பதைக் கேட்கும் எவரும், அவரை, 'கனவு காண்பவர்' என்று முத்திரை குத்துவர் என்று கூறியத் திருத்தந்தை, ஆபிரகாம் கண்ட கனவு, வெறும் பகல் கனவல்ல, மாறாக, நம்பிக்கை கனவு என்று சுட்டிக்காட்டினார்.

இன்று ஒருநாள், தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் என்ற எதையும் நாடாமல், 5 அல்லது 10 நிமிடங்கள் தனித்திருந்து, இறைவன் வழங்கிய கொடைகளை, வாக்குறுதிகளை அசைபோட உங்களை அழைக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாக அழைப்பு விடுத்தார்.

தான் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, "இறைவன் நமக்காக வைத்திருக்கும் அதிசயங்களுக்கு நம் மனதைத் திறந்து வைத்திருக்க, நம்பிக்கை உதவுகிறது" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழன் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.