2017-04-07 15:06:00

பெங்களூரு “மீட்பின் ஓட்டம்” கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கை


ஏப்.07,2017. பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஒன்றிப்பை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் விதமாக, “மீட்பின் ஓட்டம்” என்ற நடவடிக்கையை, பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள், ஃபிரேசர் டவுண் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில், இச்சனிக்கிழமை காலையில் ஆரம்பித்து வைக்கிறார்.

பெங்களூரு பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், முக்கியமான விளையாட்டு வீரர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நடவடிக்கையில் கலந்துகொள்வதற்கு, தங்களின் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்று, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இச்சனிக்கிழமை காலை 6 மணிக்கு, பேராயர் மொராஸ் அவர்கள் கொடியசைத்து, இந்த “மீட்பின் ஓட்டம்” நடவடிக்கையைத் தொடங்கி வைப்பார். இந்நடவடிக்கை, ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் மற்றும், மூன்று கிலோ மீட்டர் தூரம் நடையைக் கொண்டுள்ளது.

பல்வேறு கிறிஸ்தவ சபை உறுப்பினர்களை ஒன்றிணைக்கவும், நலமான வாழ்வு வழியாக, கட்டுப்பாடான வாழ்வை அவர்கள் அமைத்துக்கொள்ளவும், இந்நடவடிக்கை உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்பவர்கள், “நான் கிறிஸ்துவுக்குச் சொந்தம்” என்று பொறிக்கப்பட்ட நீலநிற சட்டையை அணிந்துகொள்வார்கள்.

ஆதாரம் : Daijiworld/UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.