2017-04-16 15:16:00

உயிர்ப்பு விழா திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


ஏப்.,16,2017. ஏப்ரல் 16, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு காலை 10 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் தலைமையேற்று நடத்திய திருப்பலியில் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதர, சகோதரிகளே, 'இயேசு உயிர்த்துவிட்டார்' என்ற செய்தியை இன்று திருஅவை சப்தமிட்டு கூறுகிறது, பாடுகிறது. ஏன்? பேதுரு, யோவான், பெண்கள் அனைவரும் வேதனையால் மூடப்பட்ட உள்ளங்களுடன் கல்லறைக்குச் சென்றனர். அவர்களைப் பொருத்தவரை, இறந்தவர் மீண்டும் உயிர் பெற்றெழுவது இயலாத ஒன்று. இத்தகைய மனநிலையே தோல்வி. தோல்வி, நம்மை கல்லறைக்கு அழைத்துச் செல்லும்.

கல்லறைக்குச் சென்றவர்களிடம், வானதூதர், "அவர் இங்கில்லை, உயிர்த்துவிட்டார்" என்று கூறினார். இச்செய்தியைத் தொடர்ந்து, குழப்பங்கள் எழுந்தன. தங்கள் தலைவருக்கு நடந்ததுபோல் தங்களுக்கும் நிகழும் என்று அஞ்சிய சீடர்கள், மேலறையில் தங்களையே மூடி வைத்துக்கொண்டனர். மூடியிருந்த சீடர்களின் உள்ளங்களைத் திறக்க, உயிர்த்த இயேசு அவர்கள் முன் பலமுறை தோன்றினார்.

திருஅவையும் தோல்விகளைச் சந்தித்துள்ளது. அந்நேரங்களில், நாம் அச்சத்தால் நம் உள்ளங்களை மூடி வைத்துள்ளோம். நம்மிடம் இன்று, "இயேசு உயிர்த்துவிட்டார்" என்று, திருஅவை சொல்கிறது. இது கற்பனை அல்ல, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெறும் விழா நிகழ்ச்சியும் அல்ல.

கட்டுவோரால் தூக்கியெறியப்பட்ட கல், மூலைக்கல்லாக மாறியதை, கிறிஸ்துவின் உயிர்ப்பில் நாம் கொண்டாடுகிறோம். தூக்கியெறியும் கலாச்சாரத்திற்குப் பழகிவிட்ட நாம், பலவற்றைத் தூக்கியெறிகிறோம். துன்பமும், கொடுமையும் சூழ்ந்த இவ்வுலகில், சிறு, சிறு கற்களாக இருக்கும் நாம் அனைவருமே மதிப்பு பெற்றவர்கள். யாரையும் தூக்கியெறிய இயலாது.

நம்மைச் சுற்றி நிகழும் அனைத்து துயரங்களையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாவிட்டாலும், 'கிறிஸ்து உயிர்த்துவிட்டார்' என்பதை, நம்பிக்கையோடு எடுத்துச் சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.