2017-04-24 16:25:00

அருள்பணி மிலானிக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி


ஏப்.24,2017. அருள்பணி லொரென்சோ மிலானி (Lorenzo Milani) அவர்களின் வாழ்வில், சிலுவையின் நிழல் நீண்டிருந்தாலும், அவர் உயிர்ப்பின் மறையுண்மையில் அதிக நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிலான் நகருக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் கூறினார்.

1967ம் ஆண்டு, தன் 44வது வயதில் இறையடி சேர்ந்த அருள்பணி மிலானி அவர்கள் எழுதிய நூல்களின் தொகுப்பு, மிலான் நகரில் வெளியிடப்பட்டதையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், தன்னை இறைவனின் இரக்கத்திற்கும், திருஅவையின் தாய்மை நிறைந்த பிரிவுக்கும் கையளித்த அருள்பணி மிலானி அவர்களைப் பாராட்டியுள்ளார்.

வறிய குடும்பங்களில் பிறந்த குழந்தைகள், அவர்கள், வேற்று மதத்தவராயினும், மத நம்பிக்கையற்ற குடும்பங்களில் பிறந்தவர்கள் ஆயினும், கல்வி பெறவேண்டும் என்பதில், அருள்பணி மிலானி அவர்கள் தீவிர ஆவல் கொண்டிருந்தார் என்பதை, தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உன்னத ஆவலால் தூண்டப்பட்ட அருள்பணி மிலானி அவர்கள், ஏனைய அருள்பணியாளர்கள், திருஅவைத் தலைவர்கள் ஆகியோரின் கண்டனங்களைப் பெற்றாலும், தன் பணியிலிருந்து விலகவில்லை என்றும், திருஅவை மீது அவர் கொண்டிருந்த பற்று குறையவில்லை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் எடுத்துரைத்தார்.

இத்தாலியில், நடைமுறையில் இருந்த கல்விக் கொள்கைகளில் விளங்கிய பல்வேறு குறைகளை வெளிக்கொணர, அருள்பணி மிலானி அவர்கள், 'பேராசிரியருக்கு ஒரு கடிதம்' என்ற நூலை எழுதியுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

1923ம் ஆண்டு இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிறந்த மிலானி அவர்கள், 1943ம் ஆண்டு, தன் 20வது வயதில் திருமுழுக்கு பெற்று, பின்னர், 1947ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். இரத்தப் புற்றுநோய் காரணமாக, 1967ம் ஆண்டு, தன் 44வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.