2017-04-24 16:01:00

கர்தினால் நிக்கோராவின் மறைவுக்கு, திருத்தந்தையின் தந்தி


ஏப்.24,2017. ஏப்ரல் 22, இச்சனிக்கிழமை மாலை, இறையடி சேர்ந்த கர்தினால் அத்திலியோ நிக்கோரா (Attilio Nicora) அவர்களின் மறைவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆழ்ந்த அனுதாபங்களை, ஒரு தந்தியின் வழியே தெரிவித்துள்ளார்.

கர்தினால் நிக்கோரா அவர்கள், இத்தாலிய சமுதாயத்திற்கும், இத்தாலிய தலத்திருஅவைக்கும் ஆற்றிய பணிகளுக்கு, குறிப்பாக, சட்டம், நீதி ஆகிய துறைகள் வழியே ஆற்றிய பணிகளுக்கு, திருத்தந்தை, தன் நன்றியை, இத்தந்தியின் வழியே தெரிவித்துள்ளார்.

கர்தினால் நிக்கோரா அவர்களின் அடக்கத் திருப்பலி, இத்திங்கள் பிற்பகல் 2.45 மணிக்கு, கர்தினால்கள் குழுமத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ சொதானோ அவர்கள் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற இத்திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் நிக்கோரா அவர்களுக்கு இறுதிச் சடங்கினை நிறைவேற்றினார்.

1937ம் ஆண்டு, மார்ச் 16ம் தேதி, இத்தாலியின் வரேசே எனுமிடத்தில் பிறந்த நிக்கோரா அவர்கள், 1964ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1977ம் ஆண்டு, ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற இவர், மிலான் அருள்பணியாளர் பயிற்சிக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியவர்.

1997ம் ஆண்டு முதல் திருப்பீடத்தின் நீதித்துறையில் பணியாற்றி வந்த இவரை, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 2003ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தினார்.

தன் 80வது வயதில் இறையடி சேர்ந்த கர்தினால் நிக்கோராவின் மறைவையடுத்து, திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை, 222 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 117 ஆகவும் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.