2017-04-29 17:05:00

கெய்ரோ இராணுவப் பாதுகாப்பு திறந்தவெளி அரங்கத்தில் திருப்பலி


ஏப்.29,2017. ஏப்ரல் 29, இச்சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு, கெய்ரோ திருப்பீடத் தூதரகத்திலிருந்தவர்களை வாழ்த்தி, திருக்குடும்ப வண்ணப்படம் ஒன்றை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், கெய்ரோ நகரின் இராணுவப் பாதுகாப்பு திறந்தவெளி அரங்கத்திற்கு வந்து, அங்குக் கூடியிருந்த விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை. பின், திருப்பலியைத் தொடங்கினார்.

எகிப்தில் கத்தோலிக்கர் 0.31 விழுக்காட்டினர். அண்மைய நாள்களில் எகிப்து நாடு பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் குண்டு துளைக்காத வாகனம் திருத்தந்தைக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால், திருத்தந்தை அதை மறுத்து, சாதாரண பியட் காரிலே இந்நாள்களில் கெய்ரோவில் பயண நிகழ்வுகளை நடத்தினார்.

இத்திருப்பலியின்போது, பலத்த பாதுகாப்புகள் இடம்பெற்றிருந்தன. மூன்று அடிக்கு ஒருவர் வீதம் காவல்துறையினர் நின்றனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இத்திருப்பலியில், முதலில், காப்டிக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை இப்ராஹூம் ஈசாக் சித்ராக் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். திருத்தந்தையே,  அளவில்லா மகிழ்வைத் தந்துள்ள தங்களின் வருகைக்காக, காப்டிக் கிறிஸ்தவர்கள் மற்றும், அனைத்து எகிப்தியர் சார்பாக நன்றி. எங்கள் மத்தியில் தங்களின் இருப்பு, மகிழ்வையும், ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளது. அமைதியின் எகிப்தில், அமைதியின் திருத்தந்தை’என்ற, இப்பயண விருது வாக்கிற்கேற்ப, தாங்கள் அமைதியின் பயணியாக வந்துள்ளீர்கள். எகிப்து, மதங்களின் தொட்டில். இறைவாக்கினர்களையும், திருக்குடும்பத்தையும் உபசரித்த நாடு. தங்களின் செய்தியும் பயணங்களும், இப்பூமியில் அமைதியைப் பாதுகாப்பதாக உள்ளது என்றார், முதுபெரும் தந்தை ஈசாக் சித்ராக். இந்த அரங்கத்தில் திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில் மறையுரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.