2017-05-01 16:31:00

தென் கொரியாவில் பாத்திமா அன்னைக்கென தொடர் வழிபாடுகள்


மே 01,2017. பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சியளித்த 100வது ஆண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, தென் கொரியாவின் சோல் (Seoul) உயர் மறைமாவட்டத்தில், அமைதி மற்றும் நற்செய்திப்பணி இவற்றை மையப்படுத்தி, தொடர் செப வழிபாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக, UCAN செய்தி கூறுகிறது.  

"பாத்திமா காட்சியின் நூறாவது ஆண்டையொட்டி, செப திருப்பயணம்" என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் இம்முயற்சி, மே 13ம் தேதி துவங்கி, அக்டோபர் 13ம் தேதியன்று Myeongdong பேராலயத்தில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவிவரும் போர்ச்சூழலையும், அமைதிக்காக செபிக்கும்படி பாத்திமா அன்னை இவ்வுலகிற்கு விடுத்த அழைப்பையும் மனதில் கொண்டு, இந்த முயற்சியை மேற்கொள்ளுமாறு, இவ்வுயர் மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

பாத்திமா நகரைச் சேர்ந்த ஒரு வர்த்தகர், வட மற்றும் தென் கொரிய நாடுகள், அமைதியில் ஒருங்கிணைய வேண்டும் என்ற விருப்பத்துடன், Pyongyang மறைமாவட்டத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய பாத்திமா அன்னையின் திரு உருவம், இந்த தொடர் செப முயற்சியில் பல ஆலயங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.