2017-05-04 17:15:00

மே 03, உலக செய்தித்துறை விடுதலை நாள்


மே 04,2017. உண்மையைக் கடந்து, போலிச் செய்திகளை உருவாக்கும் போக்கு அதிகரித்துவரும் இன்றையச் சூழலில், செய்தியாளர்கள், தங்கள் பணியை, நம்பகத்தன்மையுடன் ஆற்றுவது, மிக முக்கியமாக மாறிவருகிறது என்று ஐ.நா.அவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மே 3, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட உலக செய்தித்துறை விடுதலை நாளையொட்டி, (World Press Freedom Day) செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், தவறான செய்திகளை பரவவிடாமல் தடுப்பதும், உண்மைச் செய்திகளை வெளியிடுவதும், செய்தியாளர்கள் முன் உள்ள சவால்கள் என்று கூறினார்.

'நெருக்கடியான நேரங்களில், பகுத்தறியும், தெளிவான சிந்திக்கும் திறன்கள்' என்ற மையக்கருத்துடன், உலக செய்தித்துறை விடுதலை நாள் இவ்வாண்டு சிறப்பிக்கப்படுகிறது.

உண்மையைப் பகரும் செய்தியாளர்கள், எளிதில் கொல்லப்படுகின்றனர் என்பதை கவலையுடன் எடுத்துரைத்த யுனெஸ்கோ தலைமை இயக்குனர், இரீனா பொக்கோவா அவர்கள், 2016ம் ஆண்டு, 102 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர் என்பதை நினைவு கூர்ந்தார்.

உலக செய்தித்துறை விடுதலை நாள் இவ்வாண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மே 1ம் தேதி முதல் 4ம் தேதி முடிய யுனெஸ்கோ நிறுவனத்தால் கொண்டாடப்பட்டது என்பதும், நியூ யார்க் ஐ.நா. தலைமையகத்தில், இவ்வியாழன், இந்நாளையொட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.