2017-05-09 15:57:00

வரவேற்கும் நாடுகளின் கலாச்சார மரபுகளை மதிக்கும் பொறுப்பு


மே,09,2017. குடியேற்றதாரர் மற்றும், புலம்பெயர்ந்தோர் குறித்து அமைக்கப்படும் உலகளாவிய ஒப்பந்தங்கள், உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மானுடத்தின் பொதுவான விழுமியங்களால் வழிநடத்தப்படுவதாய் இருக்க வேண்டும் என, திருப்பீட அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

புலம்பெயரும் மக்களுக்குப் பாதுகாப்பு, மற்றும், அம்மக்கள் குறித்து உலகளாவிய ஒப்பந்தங்கள் கொண்டுவரப்படுவதற்கென, ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யூர்க்கோவிச் (Ivan Jurkovič) அவர்கள், இவ்வாறு கூறினார்.

இனப்பாகுபாடு, அந்நியர்மீது காழ்ப்புணர்வு மற்றும் சகிப்பற்றதன்மை உட்பட, எல்லாவிதமான பாகுபாடுகள் குறித்து நடைபெற்ற அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், புலம்பெயரும் மக்கள் தங்களை வரவேற்கும் நாடுகளின் கலாச்சார மற்றும் ஆன்மீக மரபுகளை மதிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

அதேநேரம், புலம்பெயரும் மக்களும், உலகளாவிய மனித முகத்தை அமைக்கின்றனர் என்றும், நாடுகள் மத்தியில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அவர்கள் கருவியாகச் செயல்பட முடியும் என்றும் கூறினார், பேராயர் யூர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.