2017-05-26 15:25:00

தென் கொரிய புதிய அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு வாழ்த்து


மே,26,2017. தென் கொரியாவின் புதிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தன் வாழ்த்துக்கள் அடங்கிய செய்தியை, ஒரு சிறப்புத் தூதர் வழியாக வழங்கியுள்ளார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், மே 24, இப்புதனன்று நடைபெற்ற பொதுமறைக்கல்வியுரையில், திருப்பீடத்துக்கான தென் கொரியத் தூதர் Seong Youm,   தென் கொரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Hyginius Kim Hee-jong ஆகிய இருவரும் கலந்துகொண்டு, அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை திருத்தந்தையிடம்  அளித்தனர்.

அமைதி, நீதி, ஒப்புரவு ஆகியவற்றுக்கு, திருத்தந்தை ஆற்றிவரும் நற்பணிகளுக்கு, அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள் தன் சிறப்புப் பாராட்டுக்களை, அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

1947ம் ஆண்டு, ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலை பெற்றதும், திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள், அந்நாட்டிற்கு, திருப்பீடத்தின் தூதராக, அருள்பணி Patrick James Byrne அவர்களை அனுப்பியதன் வழியே, கொரியாவை ஒரு தனி நாடாக, திருப்பீடம் ஏற்றுக்கொண்டது.  

1948ம் ஆண்டு திருப்பீடம் மேற்கொண்ட முயற்சிகளால், பல கத்தோலிக்க நாடுகள், கொரியாவை, தனி நாடாக ஏற்றுக்கொள்ள முன்வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்கிடையே, தென் கொரியாவில், குடியேற்றதாரர் பாதுகாக்கப்படவும், இனப்பாகுபாடு தடை செய்யப்படவும், புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்நாட்டின் பல்சமய குழு ஒன்று, விண்ணப்பித்துள்ளது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.