2017-05-27 14:22:00

திறமையான தொழிலதிபர், ஆதாயத்தை மட்டும் தேடும் வர்த்தகர் அல்ல


மே,27,2017. ஒரு திறமையான தொழிலதிபர், படைப்பாற்றல்திறன், தொழில் மீது அன்பு, தனது பணி மற்றும், பணியாளர்கள் மீது பற்று, பணியாளர்களின் பண்புகளை அறிதல் போன்ற திறமைகளைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்று, இச்சனிக்கிழமை காலையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இத்தாலியின் வடமேற்கிலுள்ள துறைமுக நகரமான ஜெனோவாவிற்கு, ஒருநாள் மேய்ப்புப்பணி பயணத்தை, இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு, வத்திக்கானிலிருந்து தொடங்கிய திருத்தந்தை, 8.15 மணிக்கு ஜெனோவா நகரை அடைந்து, முதலில், அந்நகரின் ILVA இரும்பு தொழிற்சாலையில், தொழிலாளர்களைச் சந்தித்தார்.

சிறிய மின்சார வாகனத்தில் அத்தொழிற்சாலையைப் பார்வையிட்ட பின்,  அங்கு நடந்த சந்திப்பில், ஒரு தொழிலதிபர், தொழிலாளர் குழுவின் ஒரு பிரதிநிதி, ஒரு தொழிலாளர், வேலையின்றி இருக்கும் ஒருவர் என, நான்கு பேர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.

கப்பல்களைப் பழுதுபார்க்கும் தொழிலை நடத்தும் ஃபெர்னாந்தோ கார்ரே என்பவர் கேட்ட கேள்விக்கு முதலில் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திறமையான தொழிலதிபரின் பண்புகள் மற்றும், தொழிலின் மேன்மை குறித்து நீண்ட விளக்கம் அளித்தார்.

ஒருகாலத்தில் தனது தந்தை, அர்ஜென்டீனாவுக்கு புலம்பெயர்ந்தபோது, ஜெனோவா நகர் வழியே சென்றதைக் குறிப்பிட்டு, அந்நகருக்கு முதல்முறையாக தான் வந்துள்ளது குறித்து மகிழ்வதாகத் தெரிவித்த திருத்தந்தை, இக்காலத்தில் தொழில் அச்சுறுத்தலில் உள்ளது, தொழிலையும், தொழிலாளரையும் மாண்புடன் கருதாத ஓர் உலகில் வாழ்கிறோம், தொழில் உலகம் மனிதருக்கு முன்னுரிமை கொடுப்பதாய் உள்ளது, எனவே, இது கிறிஸ்தவரின், திருத்தந்தையின் முன்னுரிமையாகும் என்று கூறினார்.

நீ நிலத்தில் உழைத்து, அதை ஆளுவாயாக என்பதே, கடவுள் ஆதாமுக்கு அளித்த முதல் கட்டளை  எனவும், தொழிலாளரான இயேசு தொடங்கி, திருஅவைக்கும், தொழிலுக்கும் இடையே எப்போதும் நட்புறவு நிலவுகின்றது எனவும் கூறிய திருத்தந்தை, ஓர் உண்மையான தொழிலதிபர், முதலில், தான் ஒரு பணியாளர் என்பதை மறக்கக்கூடாது, அதேநேரம், தன் பணியாளர்களின் பண்புகளையும் நன்கு அறிந்தவராய் இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

ஒருவரை வேலையிலிருந்து நீக்குவது தொழிலதிபருக்கு மிகவும் வேதனையளிக்கும் எனவும், ஓராண்டிற்கு முன்னர், ஒருநாள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருப்பலியின் இறுதியில், ஒரு தொழிலதிபர், தன்னிடம் வந்து அழுது கண்ணீர் சிந்தியதையும் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இக்காலப் பொருளாதாரத்தில் காணப்படும் நோய் பற்றியும் பேசினார்.

தொழிலதிபர், இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முதலீடு செய்பவராக இருக்கக் கூடாது, ஏனெனில், இவ்வாறு செயல்படும் வர்த்தகர் தனது நிறுவனத்தையும், தன் பணியாளர்களையும் அன்புகூர மாட்டார், மாறாக, ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டிருப்பார் என்றும், ஆனால், சிலவேளைகளில், அரசியல் அமைப்பு, இத்தகைய வர்த்தகர்களையே ஊக்குவிப்பதுபோல் தெரிகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்தத் தொழிற்சாலையில் இச்சந்திப்பு நடந்தது குறித்து தான் மகிழ்வதாகவும், ஏனென்றால், இத்தகைய இடங்களும், இறைமக்களின் இடங்கள் எனவும், தொழில் உலகம், கடவுளின் மக்களின் உலகம் எனவும், பணியிடங்கள் நடைபெறும் கலந்துரையாடல்கள், ஏனைய உரையாடல்களைவிட எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வேலையின்றி இருக்கும் குடும்பத்தில் விழாக்கள் இல்லை என, வேலையின்றி இருக்கும்நிலை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை,  வேலைசெய்வதால், நாம் மனிதர் என்ற உணர்வை அதிகம் பெறுகிறோம், இதனால், மனித சமுதாயம் வளமையடைகிறது, வேலைசெய்வதால் மட்டுமே இளையோர் வயது வந்தவர்கள் ஆகிறார்கள், மனிதரின் வேலை, படைப்புத்தொழிலில் பங்கெடுப்பதாக, அது ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது என திருஅவையின் சமூகக் கோட்பாடு நோக்குகின்றது என்றும், ஜெனோவா இரும்புத் தொழிற்சாலை பணியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லா தொழில்களும் நல்லவையல்ல, ஏனென்றால், பாலியல் வர்த்தகம், ஆயுத வர்த்தகம், சூதாட்டம், போன்ற தீய தொழில்களும் உள்ளன எனவும் கூறியத் திருத்தந்தை, ஒருவர் வேலை செய்யாதபோது, மோசமாகச் செய்யும்போது, குறைவாகச் செய்யும்போது அல்லது அதிகமாகச் செய்யும்போது, நாட்டின் சனநாயகம் நெருக்கடிக்கு உள்ளாகின்றது எனவும் எச்சரித்தார்.   

இச்சந்திப்பு முடிந்து, ஜெனோவா, புனித இலாரன்ஸ் பேராலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், குருத்துவமாணவர்கள், அருள்சகோதரிகள், மற்றும், மேய்ப்புப்பணியில் உதவிபுரியும் பொதுநிலையினரைச் சந்திக்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். அச்சமயத்தில், அந்த வளாகத்தில் ஏராளமான மக்கள், வத்திக்கான், அர்ஜென்டீனா கொடிகள், இன்னும் திருத்தந்தையின் படங்களுடன் நின்று, பிரான்செஸ்கோ, பிரான்செஸ்கோ, வாழ்க திருத்தந்தை என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.