2017-06-07 16:29:00

அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியே தீர்வு கொணரும்


ஜூன்,07,2017. இவ்வுலகம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு, பன்னாட்டு அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியே தகுந்த தீர்வுகளைக் கொணரும் என்பதை, திருப்பீடம் நம்புகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை நடத்திய 35வது அமர்வில் இச்செவ்வாயன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

குடியேற்றம், காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், ஆயுதம் தாங்கிய மோதல்கள், செல்வருக்கும், வறியோருக்கும் இடையே அதிகரித்துவரும் வேறுபாடு என்ற பல்வேறு பிரச்சனைகளை, அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் மட்டுமே தீர்க்க முடியும் என்று பேராயர் Jurkovič அவர்கள் எடுத்துரைத்தார்.

அரசுகள் ஒருங்கிணைந்து வருவது, அவ்வப்போது நிகழும் சமுதாயப் பணி அல்ல, மாறாக, அத்தகைய மனநிலை, அடிப்படைத் தேவை என்பதை, அனைத்து அரசுகளும் உணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, பேராயர் Jurkovič அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அரசுகள் ஒருங்கிணைந்துவந்து முடிவெடுக்கும் வேளையில், சமுதாயத்தின் நலிந்த மக்களின் தேவைகளையும், கருத்துக்களையும் மனதில் கொண்டு முடிவுகள் எடுக்கவேண்டும் என்பதையும் பேராயர் Jurkovič அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.