2017-06-16 15:37:00

மற்றவர்கள் அக்கறை காட்டப்பட வேண்டிய மனிதர்கள்


ஜூன்,16,2017. “அன்புக்கு, படைப்பாற்றல் திறன்கொண்ட தெளிவான பதில் தேவைப்படுகின்றது. நல்ல எண்ணங்கள் இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வெறும் புள்ளி விபரங்கள் இல்லை, ஆனால், அவர்கள் அக்கறை காட்டப்பட வேண்டிய மனிதர்கள்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்

மேலும், கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயரின் பிரதிநிதியும், உரோம் ஆங்லிக்கன் மையத்தின் இயக்குனருமாகிய பேராயர் David Moxon அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஆங்லிக்கன்-உரோமன் கத்தோலிக்க உரையாடல் குழுவின்(ARCIC) துணைத்தலைவராகவும் பணியாற்றும் பேராயர் Moxon அவர்கள், இச்சந்திப்பையொட்டி வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், இந்த உரையாடல் குழுவின் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நடைமுறை வாழ்விலும், ஆன்மீகத்திலும், குடும்ப வாழ்வு குறித்த விவகாரங்களிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதற்கு, தன்னால் சாட்சி சொல்ல முடியும் எனவும், பேராயர் Moxon அவர்கள் கூறினார்.

மேலும், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலகம், இளையோர் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென, புதிய வலைத்தளம் ஒன்றை, ஜூன் 14, இப்புதனன்று தொடங்கியுள்ளது.

“இளையோர், விசுவாசம், மற்றும் அழைப்பைத் தேர்ந்து தெளிதல்” என்ற தலைப்பில், 2018ம் ஆண்டு அக்டோபரில், 15வது உலக ஆயர்கள் மாமன்றம், வத்திக்கானில் நடைபெறவுள்ளது. இந்த வலைத்தளத்தில் இளையோர்க்கென பல்வேறு மொழிகளில் கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான பதில்கள், வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.