2017-07-13 15:27:00

பானமா இளையோர் நிகழ்வுகளின் அடையாளப் பொருள்கள்


ஜூலை,13,2017. பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இளையோர் நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் சிலுவையும், அன்னை மரியாவின் உருவப்படமும், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல், உலகின் பல நாடுகளுக்கு பவனியாகக் கொண்டு செல்லப்படும் என்று, பானமா ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல், 27ம் தேதி முடிய பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு ஒரு தயாரிப்பாக, இவ்வாண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, உலக இளையோர் நாள் சிலுவையும், மரியன்னையின் உருவப்படமும், மெக்சிகோ நாட்டில் தன் பயணத்தைக் துவக்கும் என்று பானமா ஆயர்கள் கூறியுள்ளனர்.

மத்திய, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகள் மற்றும் ஏனைய நாடுகளில் பவனியாகக் கொண்டு செல்லப்படும் இந்த அடையாளப் பொருள்கள், 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு ஓர் அழைப்பிதழாக அமையும் என்று, ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பானமா நாட்டில் நடைபெறும் இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் நாட்டுக்கு வருவர் என்று எதிர்பார்ப்பதாக ஆயர்கள் கூறியுள்ளனர் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

உலக இளையோர் நாளுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட மையக் கருத்தான, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்ற சொற்களின் அடிப்படையில், இந்த உலக நிகழ்வுக்கு உரிய பாடல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது என்று Zenit செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.