2017-07-14 15:27:00

கங்கை கரையோரத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்குத் தடை


ஜூலை,14,2017. கங்கை நதியின் தூய்மையைக் காப்பாற்றும் நோக்கத்தில், அந்நதியிலும், அதிலிருந்து ஐந்நூறு மீட்டர் தூரம் வரையிலும், குப்பைகளைக் கொட்டுவதையும், மனித உடல்களைப் போடுவதையும், இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைசெய்துள்ளது.

இந்தியாவில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மிகப்பெரிய நிறுவனமான, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தடையை மீறுகின்றவர்களுக்கு, ஐம்பதாயிரம் ரூபாய்வரை அபராதம் விதிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புனித நதிகளாகக் கருதப்படும் கங்கை, யமுனைக்கு ‘வாழும் மனிதர்கள்’என்ற மதிப்பை வழங்கி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டவேளை, இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார் (Swatanter Kumar) அவர்கள் தலைமையிலான அமர்வு, கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஹரித்வாருக்கும், உன்னாவுக்கும் (Haridwar, Unnao) இடையே, கங்கை நதியில் இருந்து 500 மீட்டருக்குள், குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது எனவும், நூறு மீட்டர் தூரத்திலுள்ள பகுதி, வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளக்கூடாத பகுதியாக அறிவிக்கப்படவேண்டும் என்றும், பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கங்கைக் கரையோரத்திலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை, ஆறு வாரங்களுக்குள், வேறு இடங்களுக்கு மாற்ற, உத்தரபிரதேச அரசு, கடமை உணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 543 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு, சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மேற்பார்வை குழு ஒன்றையும் தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்தக் குழு தொடர்ந்து ஆய்வு செய்து, அவ்வப்போது தீர்ப்பாயத்தில் அறிக்கைச் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.