2017-07-18 15:14:00

ஆசியாவில் கிறிஸ்தவ சபைகள் இணைந்து செயல்பட...


ஜூலை,18,2017. பன்மைக் கலாச்சாரம் நிறைந்த ஆசியாவில், வளர்ந்துவரும் சமயப் பயங்கரவாதம் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அக்கண்டத்தின் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என, ஆசியத் திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

‘ஆசியாவில் வாழும் திருஅவை : நம் ஒன்றிணைந்த சாட்சியம்’ என்ற தலைப்பில், தாய்லாந்தின் Chiang Mai நகரில், ஆசிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு (FABC), ஆசிய இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு (AEA), ஆசிய கிறிஸ்தவ அவை (CCA) ஆகிய மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய, கத்தோலிக்க ஆயர் Joseph Chusak Sirisut அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஆசியாவின் இன்றையச் சூழலில், அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும், மற்ற மதத்தவரோடு நல்லுறவை வளர்த்துக்கொள்வதிலும், கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஆயர் Sirisut அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

வளர்ந்துவரும் சமயப் பயங்கரவாதம், மக்களின் குடியேற்றம், மனித வர்த்தகம் போன்ற பிரச்சனைகள் பற்றியும், கிறிஸ்தவ ஒன்றிப்புக் கல்வி பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையடல்கள் இடம்பெற்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.