2017-07-19 16:16:00

திருத்தந்தை- டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோர் 3,50,00,000


ஜூலை,19,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிவரும் டுவிட்டர் செய்திகளை ஆர்வமாகப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 3 கோடியே, 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளதென்று வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.

ஒன்பது மொழிகளில் வெளியாகும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோரில், 1 கோடியே 30 இலட்சம் பேர், இஸ்பானிய மொழி பேசுபவர்கள் என்றும், 1 கோடியே 10 இலட்சம் பேர், ஆங்கிலம் பேசுபவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், @pontifex என்ற முகவரியுடன் டுவிட்டர் செய்திகளைத் துவக்கிய அன்றே, அவரது முதல் டுவிட்டர் செய்தியை, 11 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றினர்.

இஸ்பானியம், ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்த்துக்கீசியம், இலத்தீன், போலந்து, மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

மேலும், 2015ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் 'இன்ஸ்டகிராம்' வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துவரும் படங்களைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, தற்போது 50 இலட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.