2017-07-20 16:00:00

மனித உரிமைப் போராளி Liu Xiaoboக்கு நினைவுத் திருப்பலி


ஜூலை,20,2017. மனித உரிமை ஆர்வலராகப் போராடி, சீனச் சிறையில் பல ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு, இறுதியில், புற்றுநோயின் காரணமாக மரணமடைந்த Liu Xiaobo அவர்களின் நினைவாக, ஹாங்காங் மறைமாவட்டத்தில் ஜூலை 18, இச்செவ்வாயன்று திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

ஹாங்காங் மறைமாவட்டத்தின் நீதி, அமைதி, பணிக்குழுவின் ஆலோசகராகப் பணியாற்றும் அருள்பணி லூயிஸ் ஹா அவர்கள் நிறைவேற்றிய இத்திருப்பலியில் 700க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் என்று UCA செய்திக்குறிப்பு கூறுகிறது.

தன் வாழ்வின் இறுதி வரை, யாரையும் தன் எதிரி என்று கருதாமல் வாழ்ந்த Liu அவர்கள், சிறையில் தனக்குக் கிடைத்த அவமானங்கள் அனைத்தையும் முழு மனதோடு மன்னித்தார் என்று அருள்பணி லூயிஸ் ஹா அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

தன் 61வது வயதில் காலமான Liu அவர்கள், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அவர் புற்றுநோயால் துன்புறுவது அறிந்ததும், ஜூன் 26ம் தேதி விடுதலை செய்யப்பட்டு, ஜூலை 13ம் தேதி மரணமடைந்தார்.

மிக நீண்ட மனித உரிமை போராட்டத்தில், வன்முறையற்ற முறையில் ஈடுபட்டவர் என்ற கருத்துடன், Liu Xiaobo அவர்களுக்கு, 2010ம் ஆண்டு, அமைதி நொபெல் விருது அறிவிக்கப்பட்டது. அதை நேரில் சென்று பெறுவதற்கு சீன அரசு அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.