2017-07-20 15:50:00

மன்னிப்பின் யூபிலியை நிறைவு செய்யும் கர்தினால் பரோலின்


ஜூலை,20,2017. 1216ம் ஆண்டு, அசிசி நகர் புனித பிரான்சிஸ், Porziuncula சிற்றாலயத்தில் பெற்ற ஒரு காட்சியின் வழியே, பாவங்களிலிருந்து விடுதலை பெறும் பரிபூரணப் பலனை மக்களுக்குப் பெற்றுத்தந்த நிகழ்வின், 800ம் ஆண்டு யூபிலி கொண்டாட்டங்களை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் நிறைவு செய்வார் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி, 11 மணியளவில், கர்தினால் பரோலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த இறுதி  வழிபாட்டு நிகழ்ச்சிக்கு முன்னர், அசிசியில் நடைபெறும் மூன்று நாள்கள் செப முயற்சிகளை, பிரான்சிஸ்கன் துறவு சபையினர் ஒருங்கிணைப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய Porziuncula சிற்றாலயத்தில், 1216ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2ம் தேதி, அப்புனிதர் பரவச நிலை அடைந்தபோது, சிற்றாலயத்திற்கு வருபவர்கள் அனைவரும், தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெறும் பரிபூரணப் பலனைப்  அடையவேண்டும் என இறைவனிடம் மன்றாடி, அந்த வரத்தைப் பெற்றதாக ஒரு மரபு உண்டு.

இந்நிகழ்வின் 8ம் நூற்றாண்டு யூபிலியைச் சிறப்பிக்க, 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, அசிசி நகருக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Porziuncula சிற்றாலயத்தில் செபித்தபின், விண்ணகத் தூதர்களின் புனித மரியா பசிலிக்காவில் கூடியிருந்த மக்களுக்கு தியான உரை வழங்கினார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.