2017-07-21 14:48:00

பாசமுள்ள பார்வையில்...: மகளின் தாய்மையுணர்வு


பள்ளி முடிந்ததும் வேக வேகமாக ஓடினாள் அச்சிறுமி. 5ம் வகுப்புப் படிக்கும் அந்த 10 வயது சிறுமி, ஐந்தே நிமிடத்தில் வீட்டை அடைந்து, பாத்திரங்களை கழுவி, பின், தன் இரு தம்பிகளுக்கும் உடம்பைத் துடைத்து, தான் காலையில் செய்து வைத்துவிட்டுப்போன கேழ்வரகுக் கஞ்சியை குடிக்கக் கொடுத்தாள். இவள் தகப்பன் இவர்களை விட்டு விட்டுப்போய் 4 ஆண்டுகளாகிவிட்டன. கடந்த இரண்டாண்டுகளாக அம்மாவும் படுத்தப் படுக்கையாகிவிட்டார். அம்மாவின் அருகில் சென்றுப் பார்த்தார், அந்தச் சிறுமி. இவளைக் கை நீட்டி அருகே அழைத்து, அணைத்து, தலையை வருடிக் கொடுத்தார் அந்த தாய். தன் இயலாமையை எண்ணி, அந்த தாயும்தான் எத்தனை நாட்களுக்கு அழுது கொண்டிருப்பார். தனக்கிருக்கும் அந்த சிறு வயலை குத்தகைக்கு விட்டு, அதில் வரும் சிறு வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 'ஏனம்மா அழுகிறீர்கள்' என கேட்டாள் அந்த சிறுமி. 'இல்லையம்மா, இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்புக்களை  சுமக்க வைத்துவிட்டேனே' என மேலும் கண்ணீர் விட்டார் அத்தாய். 'தாய்க்கும், தம்பிகளுக்கும் உதவுவது சுமையல்ல, அது சுகம்தான்' என, பெரிய மனுஷி போல் கூறிய அச்சிறுமி, தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள். இங்கு, தாய் மகளாவும், மகள் தாயாகவும் மாறிப்போனார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.