2017-07-25 15:32:00

பாலியல் தொழிலாளர் திருந்தி வாழ உதவும் அருள்சகோதரிக்கு...


ஜூலை,25,2017. பாலினத்தை மாற்றி வாழ்வதில் ஈர்ப்புடையவர்கள் ஈடுபட்டுவரும் பாலியல் தொழிலைக் கைவிடுவதற்கு, கடந்த 11 ஆண்டுகளாக உழைத்துவரும், ஓர் அடைப்பட்ட துறவு இல்லத்தின் அருள்சகோதரி ஒருவருக்கு, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனாவின் Neuquen என்ற நகரத்தில், கார்மேல் அடைப்பட்ட துறவு இல்லத்தில் வாழ்ந்துவரும் ஐம்பது வயது நிரம்பிய அருள்சகோதரி Monica Astorga அவர்கள், தனது துறவு இல்லத்திலிருந்து வெளியே செல்லாமல், இந்தச் சமூகநலப் பணியை ஆற்றி வருகின்றார்.

இச்சகோதரி ஆற்றிவரும் பணியை ஊக்குவித்து மின்னஞ்சல் செய்தி அனுப்பியுள்ள  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சகோதரியுடனும், அவரது துறவு இல்லத்துடனும், அவரோடு சமுகநலப் பணியாற்றும் எல்லாருடனும் தான் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாக எழுதியுள்ளார்.

இச்சகோதரி இணைந்து பணியாற்றும் குழு, Neuquen நகரத்தில், முன்னாள் பாலியல் தொழிலாளர் பெண்களுக்கென, 15 குடியிருப்புகள் கட்டும் திட்டம் மற்றும், வயதானவர்களுக்கென ஓர் இல்லம் திறப்பது குறித்து தான் கேள்விப்பட்டு, இச்செய்தியை அனுப்புவதாகவும், திருத்தந்தை அதில் குறிப்பிட்டுள்ளார். 

திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியின் ஒரு பகுதி, அர்ஜென்டீனாவின் Neuquen நகரத்தின், LmNeuquen.com என்ற வலைத்தள தினத்தாளில், இத்திங்களன்று வெளியானது.

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவர், ஒருசமயம், அருள்சகோதரி Monica Astorgaவின் கார்மேல் துறவு இல்லத்திற்குச் சென்று, தனது உழைப்பில் பத்தில் ஒரு பாகத்தைக் கொடுக்க விரும்பினார். அப்போது, அவரது தொழில் பற்றிக் கேட்டறிந்த அருள்சகோதரி Monica, அச்சிறுமியும், இன்னும், இவர் போன்று தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களும் திருந்தி வாழ உதவியிருக்கிறார். 

ஆதாரம் : Zenit/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.