2017-07-28 15:10:00

கர்தினால் பரோலின் : செப்டம்பரில் இரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம்


ஜூலை,28,2017. திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வருகிற செப்டம்பரில், இரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பதை உறுதிசெய்துள்ளது திருப்பீடம்.

கிழக்கு ஐரோப்பாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, திருப்பீடத்தின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், பெலாருஸ் மற்றும், உக்ரைன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், அதன் தொடர்ச்சியாக, இரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார் என, திருப்பீடம் கூறியுள்ளது.

கிழக்கு ஐரோப்பியப் பயணம் குறித்து, “Il Sole 24 ore” என்ற இத்தாலிய தினத்தாளுக்குப் பேட்டியளித்த, கர்தினால் பரோலின் அவர்கள், கிழக்கு ஐரோப்பாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, திருப்பீடம் கொடுத்துவரும் ஆதரவை, அப்பகுதியின் இருளான ஆண்டுகளில்கூட குறைத்துக்கொண்டதில்லை எனக் கூறினார்.

கிழக்கு ஐரோப்பா மற்றும், இரஷ்யாவுடனுள்ள உறவுக்கு, திருப்பீடம் எப்போதும் மிகுந்த மதிப்பளித்துள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், 1845ம் ஆண்டில், திருத்தந்தை 16ம் கிரகோரி அவர்களுக்கும், இரஷ்யப் பேரரசர் முதலாம் நிக்கோலாஸ் அவர்களுக்கும் இடையே நடந்த சந்திப்பையும் நினைவுபடுத்தினார்.

இரஷ்யாவிலும், போலந்து மாநிலங்களிலும், ஆயர்களின்றி காலியாக இருந்த இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களில், ஆயர்களை நியமிப்பதில், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், இரஷ்ய அரசுடன், 1847ம் ஆண்டில் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் குறிப்பிட்டார், கர்தினால் பரோலின்.

திருப்பீடத்திற்கும், இரஷ்யாவுக்கும் இடையே உறவுகள் தொடர்ந்து நீடிப்பதற்கு, பொறுமையும், மதிப்பும் நிறைந்த ஆக்கப்பூர்வமான உரையாடல் இடம்பெற்றுவருவதையும், பேட்டியில் குறிப்பிட்டார், கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.