2017-07-28 15:17:00

லாகூர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்


ஜூலை,28,2017. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்குக் காரணமான அனைத்துக் கூறுகளும் அகற்றப்படுமாறு, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

பாகிஸ்தானின் லாகூரில், ஜூலை 24, இத்திங்களன்று, தலிபான் அமைப்பு நடத்திய, தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், ஒன்பது காவல்துறையினர் உட்பட, 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 54 பேர் காயமுற்றனர்.

இத்தாக்குதல் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்ட, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் (PCBC) நீதி மற்றும், அமைதி அவை (NCJP), அப்பாவி பொது மக்களும், காவல்துறையினரும் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறியுள்ளது.

இத்தாக்குதலை, இளம் வயது இளைஞர் ஒருவர் நடத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அவை, அண்மை மாதங்களில், பல்வேறு பாகிஸ்தான் நகரங்களில், இளைஞர்களே தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்றும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள், அழிவைக் கொண்டுவருவதற்கு, இளையோரைப் பயன்படுத்துகின்றன என்றும் கவலை தெரிவித்துள்ளது. 

இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இளம் வயது தற்கொலை வெடிகுண்டுக்காரர் ஒருவர், லாகூர் புறநகர்ப் பகுதியிலுள்ள Kot Lakhpat காய்கறி சந்தைப் பகுதியை அழிக்கும் நோக்கத்தில் வந்தார் என, காவல்துறை கூறியுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள Tehrik-e-Taliban அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.