2017-07-31 16:11:00

சிரியா நகர்களில், ஆபத்தான நிலையில் குழந்தைகள்


ஜூலை,31,2017. சிரியாவின் Raqqa நகரில் மோதல்களின் இடையே சிக்குண்டு உயிரிழக்கும் மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது, குழந்தைகளுக்கான ஐ.நா. நிதி அமைப்பு, யுனிசெஃப்.

மோசூல் நகருக்கு அடுத்து தற்போது நம் கவனமெல்லாம் Raqqa நகரை நோக்கித் திரும்பவேண்டியுள்ளது என்ற யுனிசெஃப் நிறுவன அதிகாரப்பூர்வப் பேச்சாளர் Andrea Iacomini அவர்கள், அந்நகரில் 30,000 முதல் 50,000 பேர்வரை மோதல்களுக்கிடையே சிக்கியிருப்பதாக தெரிவித்தார்.

இத்தகைய மோதல்களிலிருந்து தப்பி வந்துள்ளோரும், உறவினர்களின் உயிரிழப்புக்களை நேரடியாக பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் துன்புறுவதாகவும் தெரிவித்தார் யுனிசெஃப் அமைப்பின் Iacomini அவர்கள்.

இது தவிர, இம்மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள், உணவு, சுத்தமான குடிநீர் போன்றவை இன்மையால், குழந்தைகளும், குடும்பங்களும், துன்புறுவதாகவும் தெரிவித்தார் அவர்.

Raqqa நகரில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிபெயர்ந்துள்ளதாக கூறும் யுனிசெஃப் அமைப்பு, குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துக்கள் வழங்கப்பட முடியாமையால், பல குழந்தைகள் போலியோ நோயால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.