2017-08-04 15:03:00

அணு ஆயுதங்களுக்கு எதிராக ஜெர்மன் ஆயர்கள்


ஆக.04,2017.  அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலிலிருந்து இந்த நம் உலகை விடுதலை பெறச் செய்யுமாறு, ஜெர்மன் நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை  கேட்டுக்கொண்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டதன் (ஆகஸ்ட் 6,9, 1945) நினைவுநாள்கள் மற்றும், வருகிற செப்டம்பர் 24ம் தேதி ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் தேர்தல்களையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவை, இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கத்தை எதிர்ப்பவர்கள், வல்லமை மிக்கவர்களாகவும், உறுதியுடன் செயல்படுபவர்களாகவும் உள்ளனர் என்றும், இவர்களிடம் நிறைய வளங்கள் உள்ளன என்றும் கூறும் ஆயர்களின் அறிக்கை, இந்தச் சக்திகளை வெல்வதற்கு, சனநாயக முறையில் நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறியுள்ளது.

அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கையில், கத்தோலிக்கத் திருஅவை ஊக்கமிழக்காமல் தொடர்ந்து செயல்படுமாறும், ஜெர்மன் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் ஏற்பட்ட கொடிய விளைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கை, உலகில் பனிப்போர் இடம்பெற்ற காலத்தில், கிழக்கிலும், மேற்கிலும், அணு ஆயுதங்கள் அதிகமாகக் குவிக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.