2017-08-04 15:16:00

புனித ஜான் மரிய வியான்னி விட்டுச்சென்ற ஆன்மீகம்


ஆக.04,2017. புனித ஜான் மரிய வியான்னி அவர்கள் விட்டுச் சென்ற ஆன்மீகம், பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும், குறிப்பாக, குருத்துவப் பயிற்சிபெறும் இளையோரிலும், அருள்பணியாளர்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மறைமாவட்ட அருள்பணியாளர்களின் பாதுகாவலராகிய, ஆர்ஸ் நகர் புனித ஜான் மரிய வியான்னி விழாவான ஆகஸ்ட் 04, இவ்வெள்ளியன்று, ஆர்ஸ் நகரில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால், பெர்னான்டோ பிலோனி அவர்கள், இப்புனிதரின் எடுத்துக்காட்டான ஆன்மீக வாழ்வு பற்றி விளக்கினார்.

புனித ஜான் மரிய வியான்னி, எப்போதும் கூறியதுபோன்று, நல்லவராம் கடவுள், நமக்கு ஒரு நல்ல, புனிதமான அருள்பணியாளரைக் கொடுத்துள்ளார் என்றும், இப்புனிதர், தனது மேய்ப்புப்பணி மற்றும், தன் வாழ்வால், பலரை ஆண்டவரிடம் கொண்டு வந்தார் மற்றும், ஒப்புரவாக்கினார் எனவும் கூறினார், கர்தினால், பிலோனி.

பிரான்சில் புரட்சி நடந்த ஒரு கடினமான காலத்தில், இப்புனிதர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார் என்றும், இவர் நல்ல கிறிஸ்தவராக வாழ்ந்து, நல்ல கிறிஸ்தவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளார் என்றும், கர்தினால், பிலோனி அவர்கள், மறையுரையில் கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் இலயன்சு எனும் நகருக்கு அருகிலுள்ள டார்டில்லி எனும் ஊரில் 1786ம் ஆண்டு மே 8ம் தேதி பிறந்த, புனித ஜான் மரிய வியான்னி அவர்கள், ஆர்ஸ் நகரில் பங்குக் குருவாகப் பணியாற்றி, 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி காலமானார். இவரிடம், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 300 பேர் வீதம் ஒப்புரவு அருளடையாளம் பெறக் காத்திருந்தனர் எனவும், இவர், ஒருநாளைக்கு, 16 முதல் 18 மணி நேரம்வரை ஒப்புரவு அருளடையாளம் வழங்கினார் எனவும் கூறப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.