2017-08-05 15:20:00

திருத்தந்தை : கலை, உலகுக்கு மகிழ்வைக் கொணர்கிறது


ஆக.05,2017. கலைகள், விசுவாசத்தின் அழகை வெளிப்படுத்துகின்றன மற்றும், படைப்பின் மேன்மையின் நற்செய்தியை அறிவிக்கின்றன என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

தன் ஆகஸ்ட் மாத செபக்கருத்தைக் காணொளியில் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கலைப்படைப்பை அல்லது இயற்கையின் அதிசயத்தை  நாம் வியந்து நோக்கும்போது, அவை ஒவ்வொன்றும், கடவுள் பற்றியும், அவரின் அன்பு பற்றியும் நம்மிடம் எவ்வாறு பேசுகின்றது என்பதைக் கண்டுணர்கிறோம் எனக் கூறியுள்ளார்.

கடவுளின் படைப்பு வேலையின் மதிப்பை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, நாம் வாழ்கின்ற இப்பூமியைக் கண்காணித்து பாதுகாப்பதற்கு, நம்மை அர்ப்பணிக்க வேண்டுமென்றும், திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

2016ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, திருப்பீட கழகங்களுக்கு திருத்தந்தை ஆற்றிய உரையில், கலையின் முக்கியமான பங்கை வலியுறுத்திப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

"இன்றைய காலக்கட்டத்தில் வாழும் கலைஞர்கள், தங்கள் படைப்பாற்றல் வழியே, படைப்பின் அழகை ஒவ்வொருவரும் கண்டுணர உதவுவேண்டுமென செபிப்போம்" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆகஸ்ட் மாத செபக்கருத்தாகும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.