2017-08-08 13:56:00

பாசமுள்ள பார்வையில்: உயிர் பிரியும் வேளையில் அம்மா நினைவு...


ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு நடத்திய அணுகுண்டு தாக்குதல்கள், மனித வரலாற்றில் ஆழமான, ஆறாதக் காயங்களை உருவாக்கியுள்ளன. ஹிரோஷிமாவில் அமைந்துள்ள அமைதி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குனராகப் பணியாற்றியவர், யோஷிடகா கவமோட்டோ (Yoshitaka Kawamoto) அவர்கள். 13 வயது நிறைந்த யோஷிடகா அவர்கள், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் தன் வகுப்பறையில் பிற மாணவர்களோடு அமர்ந்திருந்தார். அவ்வேளையில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் விளைவாக, அவரது பள்ளி தரைமட்டமானது. யோஷிடகா அவர்களும் அந்த இடிபாடுகளில் சிக்கி, நினைவிழந்தார். 40 ஆண்டுகள் சென்று, 1985ம் ஆண்டு, TIME இதழுக்கு யோஷிடகா அவர்கள் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்:

"எனக்கு நினைவு திரும்பியதும், மனதில் தோன்றிய முதல் எண்ணம், சக மாணவர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதே. என் முகத்திலும், வலது கையிலும் அடிபட்டிருந்தாலும், நான் அந்த இடிபாடுகள் நடுவே, மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றபடி, 'யாராவது உயிரோடு இருக்கிறீர்களா?' என்று குரல் கொடுத்தேன். அப்போது, அருகில், குவிந்து கிடந்த பலகைகள் நடுவிலிருந்து, என் நண்பன் ஓட்டா (Ota) கையசைத்தான். அவன்மீது குவிந்திருந்த பலகைகளை அகற்றி பார்த்தபோது, அவனது முதுகெலும்பு உடைந்திருந்ததென்று தெரிந்தது. இடதுகண்ணைக் காணவில்லை. அவன் எதையோ சொல்ல விழைந்தான். ஆனால் முடியவில்லை. அவனது உதடுகள் கிழிந்திருந்தன. தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறு குறிப்பேட்டை வெளியில் எடுத்து என்னிடம் தந்தான். அந்தக் குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் அவனது தாயின் புகைப்படம் இருந்தது. அதை அவன் சுட்டிக்காட்டினான். 'இதை நான் உன் அம்மாவிடம் கொடுக்கவேண்டுமா?' என்று கேட்டபோது, அவன் 'ஆம்' என்று தலையசைத்தான். அடுத்த நிமிடம், அவனது உயிர் பிரிந்தது" என்று யோஷிடகா அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

உயிர் பிரியும் இறுதி நொடிகளில், சிறுவன் ஓட்டா, தன் அம்மாவின் நினைவுடன் விடைபெற்றான்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.