2017-08-15 15:51:00

அன்னை மரியாவைப்போல் நம் சமூகத்திற்கு இயேசுவைக் கொணர்வோம்


ஆக.,15,2017. முதிர்ந்த வயதில் எலிசபெத் கருவுற்றிருக்கின்றார் என்ற செய்தியை, வானதூதர் வழியாக அறியவந்த அன்னை மரியா, எலிசபெத்துக்கும், இவ்வுலகம் முழுமைக்கும் எடுத்து வந்தது இயேசுவையே என, மரியின் விண்ணேற்பு விழாவன்று மூவேளை செப உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர், உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே'  என எலிசபெத், அன்னை மரியாவை நோக்கி வாழ்த்தியதையே, நம் ‘அருள் நிறை மரியே’ செபத்தில் கூறுகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதிய வயதில் குழந்தைப் பேறடைந்த சக்கரியா, எலிசபெத் தம்பதியருக்கு, அன்னை மரியாவின் வருகையுடன், கூடுதல் மகிழ்ச்சி பொங்குகிறது, ஏனெனில், வாழ்வுக்கும் குடும்பத்திற்கும், மக்களின் மீட்புக்கும் அர்த்தம் தருபவர், அன்னை மரியுடன் வந்துள்ளார் என்றார்.

எளியோர் மற்றும் ஏழைகளின் வழியாக தன் மீட்புத்திட்டத்தை இறைவன் நிறைவேற்றுகிறார் என, அன்னை மரியா பாடும் புகழ் பாடல் குறித்தும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எலிசபெத்தின் வீட்டில் மகிழ்ச்சியை மட்டுமல்ல, விசுவாசத்தையும் அதன் வழி வரும் நம்பிக்கை, செபம் மற்றும் வாழ்த்தையும் நாம் காண்கிறோம் என்றார்.

அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழாவை சிறப்பிக்கும் நாம், இயேசு கிறிஸ்து எனும் விலை மதிப்பற்ற கொடையை நமக்கும், நம் குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும் கொணர வேண்டுவோம் எனவும் மக்களை நோக்கி விண்ணப்பித்தார், திருத்தந்தை.

கருணையை வழங்கவும், மன்னிக்கவும், பிறரைப் புரிந்து அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் தேவையான பலத்தையும் வேண்டுவோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்களில், உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர்களாலும், சமூகப் பதட்ட நிலைகளாலும், மோதல்களாலும் துன்புறும் மக்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும், அமைதியின் அரசியாம் அன்னை மரியிடம் ஒப்படைப்பதாக எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.