2017-08-18 16:31:00

கோசொவோவில் புனித அன்னை தெரேசா பெயரில் பேராலயம்


ஆக.18,2017. கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்கள் மரணமடைந்ததன் இருபதாம் ஆண்டு நிறைவு நாளன்று, கோசொவோ (Kosovo) நாட்டில், புனித அன்னை தெரேசாவுக்கு பேராலயம் ஒன்று அர்ப்பணிக்கப்படவுள்ளது.

கோசொவோவின் Pristinaவில், வருகிற செப்டம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ள இந்த பேராலயம் அர்ச்சிப்பு நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, அல்பேனியாவில் பிறந்த கர்தினால், Ernest Simoni அவர்கள் கலந்துகொள்வார்.

இந்நிகழ்வு குறித்து CNS கத்தோலிக்கச் செய்தியிடம் பேசிய, பேரருள்திரு Shan Zefi அவர்கள், இந்நிகழ்வு, புனித அன்னை தெரேசா அவர்கள் பிறந்த நாளான ஆகஸ்ட் 26ம் தேதியிலிருந்து ஆரம்பிக்கும் எனவும், இந்த பேராலயத்திற்கு கோசொவோ நிர்வாகம் ஆதரவளித்ததை நன்றியோடு நினைப்பதாகவும் கூறினார்.

கோசொவோ நாட்டில் வாழ்கின்ற ஏறத்தாழ 21 இலட்சம் மக்களில், குறைந்தது 90 விழுக்காட்டினர் அல்பேனிய நாட்டு முஸ்லிம்கள். இந்நாடு 2008ம் ஆண்டில் செர்பியாவிடமிருந்து விடுதலையடைந்தது.

மாசிடோனியாவின் ஸ்கோப்ஜேயில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த புனித அன்னை தெரேசா, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் காலமானார்.

ஆதாரம் : CNS/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.