2017-08-30 15:49:00

திருத்தந்தை: துன்புறுவோரிடம், இயேசு பிரசன்னமாகியிருக்கிறார்


ஆக.30,2017. கட்டாயத்தின் பேரில் காணாமற்போக வைக்கப்படும் மக்களை நினைவுகூரும் உலக நாள், ஆகஸ்ட் 30, இப்புதனன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் மக்களை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"நம்மை அன்புகூர்ந்து காப்பாற்றும் இறைவனை, நம் அயலவரில் கண்டுகொண்டு, அவருக்கு நம் முதன்மையான பதிலிருப்பைத் தருவதற்கு, நற்செய்தி நம்மை அழைக்கிறது" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இப்புதனன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் நோக்கத்துடன், எவ்வித தடயமும் இன்றி தனி மனிதர்களைக் காணாமற்போகச் செய்யும் கொடுமைகளை, அரசு உட்பட, பல அமைப்புக்கள் மேற்கொள்வதை கண்டித்து, ஐ.நா. அவை 2010ம் ஆண்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இத்தீர்மானத்தின் விளைவாக, 2011ம் ஆண்டு முதல், ஆகஸ்ட் 30ம் தேதி, கட்டாயத்தின் பேரில் காணாமற்போக வைக்கப்படும் மக்களை நினைவுகூரும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.