2017-09-14 16:25:00

புதிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை


செப்.14,2017. ஆயர்கள், தங்களின் ஆன்மீக மற்றும், மேய்ப்புப் பணிகளில், கடவுளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவதற்கு, தேர்ந்து தெளிதல் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் கடந்த 12 மாதங்களில் ஆயர்களாக, திருப்பொழிவு செய்யப்பட்டவர்களிடம் கூறினார்.

திருப்பீட ஆயர்கள் பேராயமும், கீழை வழிபாட்டுமுறை பேராயமும் இணைந்து உரோமையில் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்ட புதிய ஆயர்களை, இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தேர்ந்து தெளிதல் பற்றிய மூன்று முக்கிய கூறுகளை வலியுறுத்திப் பேசினார்.

ஒவ்வோர் உண்மையான தேர்ந்து தெளிதலுக்கும் கிரியா ஊக்கியாக இருப்பவர் தூய ஆவியார், தேர்ந்து தெளிதல், திருஅவைக்கு தூய ஆவியார் வழங்கியுள்ள கொடை, தேர்ந்து தெளிதலில் வளர்வதற்கு ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் ஆகிய மூன்று தலைப்புகளில், புதிய ஆயர்களிடம் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்கள் தீர்மானங்கள் எடுக்கும்போது, அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள், பொதுநிலையினர் ஆகியோரின் வளமான கருத்துக்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், தன்னை உயர்ந்தவராகக் கருதும்போது, கடவுளின் விருப்பத்திற்கு அது முரணாகச் செல்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆயர் என்பவர், தூய ஆவியாரின் அருள், தன் மந்தைக்குக் கிடைப்பதற்கு வழியமைப்பவராக இருக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, ஆயர் என்பவர், தன்னிறைவு பெற்றவராகவும், அச்சத்துடன் தன்னையே தனிமைப்படுத்தி வாழ்பவாரகவும் இருப்பவர் அல்ல என்றும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.