2017-09-25 15:52:00

வாரம் ஓர் அலசல் – அணு ஆயுதமற்ற உலகு உருவாக...


செப்.25,2017. ராஜியா பேகம் என்பவர் பற்றி, கடந்த மே 17ம் தேதி, ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. இவர் தனது சோகக் கதையை பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். 

என்னுடைய பெற்றோர் யார் எனத் தெரியாது, என்னுடைய வயதும் எனக்குத் தெரியாது. நான் தெருக்களில் எனது வாழ்க்கையைக் கழித்தேன். பல்வேறு நபர்கள் என்னைப் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்க முயன்றபோது அவர்களிடம் இருந்து தப்பித்துள்ளேன். வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அந்தத் தொழிலில் இருந்து வெளியே வந்தால், யாரும் எனக்கு உதவி செய்யமாட்டார்கள் என எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் ஒருநாள் மாலைப்பொழுதில் அதில் இருந்து வெளியேறினேன். அப்போது நன்றாக மழை பெய்துகொண்டிருந்தது. மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கினேன். அப்போது அந்த மரத்தின் மற்றொரு பக்கத்தில் பிச்சைக்காரர் ஒருவர் தனது நாற்காலியில் அமர்ந்துகொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. மழை சற்று நின்றுவிடுவதுபோன்று இருந்தது. மழை நின்ற பின்னர் நாம் எங்குச் செல்வது என்று நினைக்கையில் எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அப்போது, அந்தப் பிச்சைக்காரர் தனது நாற்காலியை சத்தமாக இயக்கினார். அந்த சத்தம் கேட்டு அவரை நான் திரும்பிப் பார்த்தேன். அவரும் அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். அவரிடம் என்னிடம் பணம் எதுவும் இல்லை எனக் கூறினேன். உடனே அவர் தன்னிடம் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து எனது கையில் கொடுத்துவிட்டு, இடி பயங்கரமாக இருக்கிறது, பாதுகாப்பாக இரு என்று சொல்லிவிட்டு, தனது நாற்காலியை அழுத்திக்கொண்டு தூரல் மழையில் மெதுவாகச் சென்றார். முதல் முறையாக ஓர் ஆண்மகன் என்னைப் பயன்படுத்திக்கொள்ளாமல் எனக்குப் பணம் கொடுத்துச் சென்ற தருணம் அது. அக்கணமே அந்தப் பிச்சைக்காரரின்மேல் எனக்குள் ஒருவித மதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், சில நாள்களுக்கு, அந்தப் பிச்சைக்காரர் அதே மரத்தடியில் இருப்பதைப் பார்த்தேன். அப்போது அவரிடம் சென்று பேசியபோது, அவர் தனது வாழ்க்கைக் கதையை என்னிடம் கூறினார். நான் மாற்றுத்திறனாளி என்பதால், எனது மனைவி என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சை எடுத்து பிழைக்கிறேன் எனக் கூறினார். அவரின் கதையைக் கேட்ட எனக்கு வேதனையாக இருந்தது, அவர் மீது இருந்த மரியாதை காதலாக மாறியது. நான் உங்களைக் காதலிக்கிறேன். உங்களுடைய சக்கர நாற்காலியை வாழ்நாள் முழுவதும் தள்ளுவதற்குத் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தேன். அதைக் கேட்ட அவர் சிரித்தார். எங்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை சாப்பிட்டிற்கே நாங்கள் கஷ்டப்பட்ட காலம் உண்டு. அப்படி உணவு கிடைத்தால் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம். நாங்கள் இருவரும் பழைய நாள்களை மறந்து இனிமையாக வாழ்ந்து வருகிறோம்.

முன்னாள் பாலியல் தொழிலாளியாகிய ராஜியா பேகம் இவ்வாறு தனது பழைய வாழ்வைப் பகிர்ந்துகொண்டுள்ளார். தேவையில் இருப்போர்தானே பிறரின் தேவையை உணர்வார்கள். தெருக்கள், ஆலய வாயில்கள், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், சந்தைகள் போன்ற, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தும் ஒவ்வொரு மனிதரின் வாழ்வுக்குப் பின்னும் ஒரு சோகக் கதை இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இருக்கும் இத்தாலியிலும், பழம்பெருமைமிக்க உரோமை நகரிலும்கூட, இப்படி வாழ்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கு இடையேயும் இடம்பெறும் ஆயுத மோதல்கள், இனவெறித் தாக்குதல்கள், சமயத் தீவிரவாதம், பயங்கரவாதம், பஞ்சம், பசி பட்டினி, இயற்கைப் பேரிடர்கள்.. இவ்வாறு பல்வேறு காரணங்களால் மனிதர் கைவிடப்பட்டு அநாதரவாய் நிற்கின்றனர்.

நாடுகளில் இடம்பெறும் ஆயுத மோதல்களால், பிறந்த மண்ணைவிட்டு அப்பாவி மக்கள் பெருமளவில் வெளியேறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், வட கொரியா போன்ற நாடுகளின் அணுப் பரிசோதனைகளும், அதற்கு மற்ற நாடுகள் விடுக்கும் அச்சுறுத்தல் செய்திகளும், உலகை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளன. வட கொரியா, 2006ம் ஆண்டு முதல், இதுவரை ஆறு அணுப் பரிசோதனைகளை நடத்தியுள்ளது. உறுதியற்ற அரசியல்சூழல் நிலவுகின்றபோதிலும், எங்களால் அணுப்பரிசோதனையை நடத்தமுடியும் என்று உலகுக்கு சவால் விடுவதுபோல் இச்செயல் உள்ளது. அதேநேரம், திருத்தந்தை பிரான்சிஸ் உள்ளிட்ட தலைவர்கள், உலகை அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத ஓர் இடமாக மாற்றவேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். செப்டம்பர் 26, இச்செவ்வாய், அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாளையொட்டிப் பேசியுள்ள ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டெரெஸ் அவர்கள், அணு ஆயுதங்கள் அற்ற ஓர் உலகை உருவாக்குவதற்குப் பல பாதைகள் உள்ளன. அனைத்து நாடுகளும், தங்களின் வழிகளில் இதற்குத் தங்களின் பங்களிப்பை வழங்கவேண்டுமென கூறியுள்ளார். உலக அளவில் அணு ஆயுதங்களை ஒழிப்பது, ஐ.நா.வின் தொடக்ககால இலக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. 1946ம் ஆண்டில் ஐ.நா. பொது அவையில் பேசப்பட்டு, நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இது. 1975ம் ஆண்டு முதல், ஐ.நா. பொது அவையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்குத் தேவையான நாடுகளின் கையெழுத்து அவசியமாகின்றது. இன்றும், உலகில் ஏறத்தாழ 15 ஆயிரம் அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன. இந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள், இவற்றை நவீனமயமாக்க நீண்டகாலத் திட்டங்களையும் கொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்ட மக்கள், இந்த ஆயுதங்கள் உள்ள நாடுகளில் அல்லது இந்த ஆயுத ஒப்பந்தங்களோடு கூட்டுச்சேர்ந்துள்ள நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பனிப்போருக்குப் பின், 2017ம் ஆண்டின் நிலவரப்படி, அணு ஆயுதப் பரவல் பெருமளவில் குறைந்திருந்தாலும், ஓர் ஆயுதமாவது இதுவரை அழிக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களே, 2013ம் ஆண்டில் ஐ.நா.பொது அவை, செப்டம்பர் 26ம் நாளை, அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாளாக அறிவிப்பதற்கு காரணம் என ஐ.நா.வின் செய்தி கூறுகின்றது.

வட கொரிய கம்யூனிச நாடு, 2006ம் ஆண்டு முதல் இதுவரை, பூமிக்கடியில்  ஆறு அணுப்பரிசோதனைகளை நடத்தியுள்ளது. இதனால் அந்நாடு எதைச் சாதிக்கப்போகின்றது என்ற ஒரு கேள்வியை ஊடகம் ஒன்று எழுப்பியுள்ளது. தங்களின் அடாவடி நடவடிக்கைகளால், எப்போதும் உலகை பதட்டநிலையில் வைத்திருக்கும் நாடுகளில், குடிமக்கள் பசியின்றி, நல்ல உடல் நலத்துடன் வாழ இயலுமா? மக்கள் விரும்பும் வாழ்வுமுறை அமையுமா? சமுதாயத்தில் அமைதி நிலவுமா? இவ்வாறு கேள்விகள்   தொடர்கின்றன.

ஒரு நாள் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார். உடனே செய்தியாளர்கள், துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள். எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர். காமராஜரோ ஒன்றும் இல்லை, சும்மாதான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார். செய்தியாளர்கள் அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர். உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா, "இடதுபக்கம் சட்டை கிழிந்துள்ளது, அதை மறைக்கத்தான் இடதுபக்கம் துண்டை போட்டுள்ளேன், வேணும்ன்னா பாருங்கள் என்று, துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம். அதைக் கண்ட செய்தியாளர்கள் அனைவரும் தலைகவிழ்ந்தனராம். இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தேர்தலில் தோற்றபோது சொன்னாராம் - மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம் என்று.

ஒருமுறை காமராஜர் அவர்கள், மாவட்ட ஆட்சியாளர் ஒருவரை அழைத்து இருந்தார். உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றாராம் காமராஜர். தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த ஆட்சியாளர்.. உடனே காமராஜர் அவரது தேனீர்க் கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயைக் கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு ஆட்சியாளரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவாங்கறது பிரச்சனை.... இப்படி உங்க பக்கம் இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட பக்கம் எப்படி சிந்திப்பீங்க..?" என்றாரம் படிக்காத மேதை காமராஜர். அன்பர்களே, இத்தகைய தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சமே, நாடுகளில் அப்பாவி மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக்குக் காரணம். இக்காலத்தில் காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்தால் ஆயுத மோதல்களும், அணு ஆயுத அச்சுறுத்தல்களும் இல்லாத உலகம் உருவாகியிருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.