2017-10-06 15:41:00

டிஜிட்டல் உலகில் சிறாரைப் பாதுகாக்க உறுதியுடன் ஒன்றிணைவோம்


அக்.06,2017. சிறார் உரிமைகள் குறித்த உலகளாவிய அறிக்கையையும், அது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் திருப்பீடம் முழுமையாகவும், உறுதியாகவும் ஏற்கும் அதேநேரம், இந்த அறிக்கையின் அடிப்படையில், டிஜிட்டல் உலகில் சிறாரைப் பாதுகாக்க, நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைவோம் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’ என்ற தலைப்பில், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக மாநாட்டில் கலந்துகொண்ட ஏறத்தாழ முன்னூறு பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இக்கால டிஜிட்டல் உலகில் சிறாரின் நிலை குறித்து விரிவாக விளக்கிய திருத்தந்தை, இன்று உலகில் இணையதளத்தைப் பயன்படுத்தும் முன்னூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களில், 25 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சிறார் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும், ஐம்பது கோடிக்கு மேற்பட்டவர்கள், இணையதள வசதிகளைப் பெற்றுள்ளனர், இவர்களில் பாதிப்பேர் சிறார் என்றும் கூறினார்.

இணையதளத்தில் மக்கள் எதைப் பார்க்கின்றனர்? இணையதளம் இம்மக்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்ற கேள்விகளை எழுப்பிய திருத்தந்தை, இந்த கசப்பான உண்மையிலிருந்து நம்மை மறைத்துக் கொள்ளாமல், இது குறித்து நம் கண்களை அகலத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டின் இறுதி அறிக்கை பற்றியும், இணையதளம் சிறார் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைக் களைவதற்கு இந்த மாநாட்டினர் உறுதி எடுத்துள்ளதையும் பாராட்டிப் பேசிய திருத்தந்தை, இவ்விவகாரத்தில், கத்தோலிக்கத் திருஅவை தன் முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

சட்டத்துக்குப் பறம்பே இடம்பெறும் மனித வர்த்தகம், பொருளாதார மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள், உலகளாவிய பயங்கரவாதம் உட்பட பல்வேறு கூறுகள்,  இணையதளத்தோடு தொடர்புகொண்டுள்ளன என்றும், இவற்றுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு, அச்சமின்றி செயலில் இறங்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தார், திருத்தந்தை.

டிஜிட்டல் யுகத்தில் இடம்பெறும் தவறான அணுகுமுறைகளில் மூன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இத்தவறுகளைத் துணிச்சலுடன் எதிர்க்க வேண்டுமெனவும், இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இணையதளம் சிறார்க்கு ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுவது, தொழில்நுட்பம் வழியாக தீர்வு காணச்செய்வது, இணையதளம் பற்றிய கருத்தியல் மற்றும் பொய்யான கண்ணோட்டம் ஆகிய தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா நாடுகளிலும் சிறாரின் கண்களில் எப்போதும் மகிழ்ச்சி தெரிவதற்கு, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.