2017-10-16 14:41:00

இலட்சக்கணக்கான சிறார் ஒரே நேரத்தில் செபமாலை பக்திமுயற்சி


அக்.16,2017. போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி, உலகின் பல பகுதிகளில், ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான சிறார், செபமாலை செபிக்கும் பக்திமுயற்சி ஒன்றை, Aid to the Church in Need அமைப்பு நடத்தவுள்ளது.

அக்டோபர் 18, வருகிற புதன்கிழமையன்று நடைபெறும் இப்பக்திமுயற்சியில், இலட்சக்கணக்கான சிறார் கலந்துகொண்டு உலகின் அமைதிக்காகச் செபிக்கவுள்ளனர்.

ஆயுத மோதல்களும், அநீதிகளும் நிறைந்த இந்த உலகை மாற்றுவதற்கு, சிறாருடன் இணைந்து, எல்லாக் கத்தோலிக்கரும், உலகின் அமைதிக்காகச் செபிக்குமாறு, Aid to the Church in Need அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செப அமைப்பின் தலைவராகிய, கர்தினால் மவ்ரோ பியாச்சென்சா அவர்கள், இது பற்றிக் கூறுகையில், அமைதி எல்லா நிலைகளிலும் ஆபத்தை எதிர்கொள்கின்றது, எனவேதான் அன்னை மரியின் பாதுகாவலை இறைஞ்சுகிறோம், சிறாரின் செபம், இந்த உலகை மாற்றும் சக்தியைக் கொண்டது என்று கூறியுள்ளார்.

பத்து இலட்சம் சிறார் செபமாலை செபிக்கின்றனர் என்ற பெயரில், இந்தச் சிறார் செபமாலை பக்திமுயற்சியை, 2005ம் ஆண்டில், வெனெசுவேலா நாட்டின் கரகாசில், பெண்கள் ஆரம்பித்தனர்.  

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.