2017-10-28 15:34:00

புதிய உலகளாவிய ஒருமைப்பாட்டிற்கு அழைப்பு, கர்தினால் Tauran


அக்.28,2017. மனிதம் தாழ்த்தப்பட்டுள்ள இன்றைய உலகில், புறக்கணிப்புக் கலாச்சாரமும், பேராசையும் நம் உறவுகளை பாதித்துள்ளவேளை, நம் வருங்காலத்தை வடிவமைப்பதற்கு, புதிய மற்றும் உலகளாவிய ஒருமைப்பாடும், புதிய உரையாடல் முறையும் தேவைப்படுகின்றன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

தென் கொரியாவின் சோல் நகரில், Global கிறிஸ்தவ சபையின் Luce மையத்தில் நடைபெற்ற, கிறிஸ்தவ - கன்ஃபூசிய மதங்கள் ஆலோசனை கூட்டத்திற்கு செய்தி அனுப்பிய, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், புதிய உலகளாவிய தோழமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் ஏற்பாடு செய்த இக்கூட்டம், இவ்வெள்ளி, சனி (அக்.27, 28) ஆகிய இரு நாள்களில் நடைபெற்றது. கர்தினால் அவர்களின் இச்செய்தியை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி Indunil Kodithuwakku அவர்கள் வாசித்தார்.

இயேசு, கன்ஃபூசியஸ் ஆகிய இருவரின் போதனைகளின் அடிப்படையில், கிறிஸ்தவர்களுக்கும், கன்ஃபூசிய மதத்தினருக்கும் இடையே புரிந்துணர்வு, மதிப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இக்கூட்டம் நடத்தப்பட்டதற்கு, தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார், கர்தினால் Tauran.

மதங்களுக்கிடையே திறந்த மனத்தோடும் மதிப்போடும் இடம்பெறும் உரையாடல்கள் பலன்களைத் தரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரிய மதத்தவருக்குக் கூறியதை நினைவுபடுத்தியுள்ள கர்தினால் Tauran அவர்கள், நம் உலகில் புதியதொரு நம்பிக்கையை வழங்குவதற்கு, மதங்கள் அதனதன் ஆன்மீக வளங்களைக் கண்டுணர வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.