2017-11-01 15:44:00

நீதியின் மேல் தாகம் கொண்ட அ.சகோதரி இராணி மேரி


நவ.01,2017. இறையடியாரான அருள் சகோதரி இராணி மேரி அவர்கள், நீதியின் மேல் தாகம் கொண்டிருந்ததால் 54 கத்திக்குத்துக்களைத் தாங்கி கொலையுண்டார் என்றும், தான் கொலை செய்யப்பட்ட வேளையில் இயேசுவின் திருநாமத்தைக் கூறியபடியே இறந்தார் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நவம்பர் 4, வரும் சனிக்கிழமையன்று இந்தியாவின் போபால் நகரில் அருளாளராக உயர்த்தப்படவிருக்கும் அருள் சகோதரி இராணி மேரி அவர்களைக் குறித்து, புனிதர்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் திருப்பீட பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

அருள் சகோதரி இராணி மேரி அவர்கள், இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், திருஅவையில் நீதிக்காகப் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறார் என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் கூறினார்.

நவம்பர் 4, சனிக்கிழமை, அருள் சகோதரி இராணி மேரி அவர்கள், அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியை, கர்தினால் அமாத்தோ அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும்,  அதற்கு அடுத்தநாள், உதைநகரில் நடைபெறும் சிறப்புத் திருப்பலியில், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் உட்பட, பல கர்தினால்களும், ஆயர்களும் கலந்துகொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.