2017-11-09 15:43:00

உக்ரைன் பாப்பிறை கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை


நவ.09,2017. போராலும், வன்முறையாலும் காயப்பட்டிருக்கும் இவ்வுலகில், காயமுற்ற நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டிலிருந்து உரோம் நகருக்கு வந்து, அருள்பணியாளர்களாக பயிற்சி பெறுவோரை தான் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனித திருமுழுக்கு யோவானின் உக்ரைன் பாப்பிறை கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொறுப்பாளர்கள் என 130 பேரை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, துன்பமும், பெரும் இன்னலும் திருஅவை வரலாற்றின் இன்றியமையாத அம்சங்கள் என்று கூறினார்.

85 ஆண்டுகளுக்கு முன், உரோம் நகரின் ஜியானிக்கொலோ (Gianicolo) என்ற குன்றில், உக்ரைன் பாப்பிறை கல்லூரியை நிறுவிய திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், பிரச்சனைகள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தாலும், அருள்பணியாளர்களையும், தியாக்கோன்களையும் உருவாக்கும் பணியில் மிகுந்த கவனம் செலுத்தினார் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில் நிலவும் அநீதிகள், நம் உள்ளங்களை நம்பிக்கையிழக்கச் செய்தாலும், இவற்றின் நடுவே இறைவனின் பணியாளர்கள் மனம் தளராமல் உழைப்பது அவசியம் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

சில நாட்களுக்கு முன், உரோம் நகரில் மாலையில் மழை பெய்தபோது உருவான வானவில்லை, ஜியானிக்கொலோ குன்றிலிருந்து தெளிவாகக் கண்டிருக்க முடியும் என்பதை, தன் உரையில் குறிப்பிட்டு பேசியத் திருத்தந்தை, உயர்வான, பரந்து விரிந்த கண்ணோட்டம், இறைவனுக்குப் பணியாற்றும் அனைவருக்கும் தேவை என்பதை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.