2017-11-09 14:33:00

திருத்தந்தை முதலாம் ஜான் பால் - வணங்கத்தக்கவர் என அறிவிப்பு


நவ.09,2017. இறையடியாரான திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களை புனிதரென அறிவிக்கும் முயற்சியின் அடுத்த நிலையாக, அவரை, 'வணங்கத்தக்கவர்' (“Venerable”) என்ற நிலைக்கு உயர்த்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், நவம்பர் 8, இப்புதனன்று பிற்பகல், திருத்தந்தையிடம் சமர்ப்பித்த எட்டுப்பேரில் ஒருவராக, இறையடியார், முதலாம் ஜான் பால் அவர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

1912ம் ஆண்டு இத்தாலியின் வெனெத்தோ பகுதியில் பிறந்த ஆல்பினோ லூசியானி அவர்கள், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, முதலாம் ஜான் பால் என்ற பெயருடன், திருத்தந்தையாகப் பொறுப்பேற்று, 33 நாட்களுக்குப்பின், செப்டம்பர் 28ம் தேதி, இறையடி சேர்ந்தார்.

மேலும், John Brenner என்ற மறைமாவட்ட அருள்பணியாளர், மற்றும், Leonella Sgorbati என்ற அருள் சகோதரி ஆகிய இருவரும், மறைசாட்சிகளாக உயிர் நீத்தனர் என்பதையும், Baden நகரின் அருளாளர் பெர்னார்ட் அவர்களின் புண்ணிய வாழ்வையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

இவர்களோடு, பிரான்சிஸ்கன் துறவி, Gregorio Fioravanti, இயேசு சபை துறவி,Thomas Morales Pérez, பொதுநிலையினரான Marcellino da Capradosso என்ற பேராசிரியர், புனித மகுடத்தின் மரியா என்ற அருள்சகோதரிகள் சபையை உருவாக்கிய Teresa Fardella ஆகியோரின் புண்ணிய வாழ்வு சாட்சியங்களையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.