2017-11-23 15:08:00

ரொகிங்கியா சமுதாயப் பிரதிநிதிகளை திருத்தந்தை சந்திப்பார்


நவ.23,2017. மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், மியான்மார் இராணுவத் தளபதியுடனும், ரொகிங்கியா சமுதாயப் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொள்வார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளரான Greg Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி முடிய, மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்து மேலும் சில விவரங்களை, Greg Burke அவர்கள், நவம்பர் 22, இப்புதனன்று வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.

யாங்கூன் பேராயர், கர்தினால் சார்ல்ஸ் போ அவர்கள், அண்மையில் வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தையைச் சந்தித்ததன் விளைவாக, திருத்தந்தையின் பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை, Greg Burke அவர்கள் எடுத்துரைத்தார்.

மியான்மார் இராணுவத் தளபதி, Min Aung Hlaing அவர்களுடன் திருத்தந்தை மேற்கொள்ளும் ஒரு தனிப்பட்ட சந்திப்பு, அமைதியை வலியுறுத்தும் முதல் படியாக இருக்கக்கூடும் என்று கூறிய Greg Burke அவர்கள், டிசம்பர் 1ம் தேதி, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் பல் சமய செப வழிபாட்டில் கலந்துகொள்ள, அந்நாட்டில் புலம் பெயர்ந்தோராக தஞ்சம் புகுந்துள்ள ரொகிங்கியா சமுதாயப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தென் கொரியாவுக்கும், 2015ம் ஆண்டு சனவரி மாதத்தில், இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்கும் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, மியான்மார், பங்களாதேஷ் நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூன்றாவது ஆசியப் பயணமாக அமையும்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.