2017-12-06 14:55:00

ரொகிங்கியா மக்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளோம்


டிச.06,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரொகிங்கியா மக்களிடம் மன்னிப்பு கேட்ட நிகழ்வு, தங்கள் உள்ளங்களில் ஆழப் பதிந்துள்ளது என்றும், பங்களாதேஷில் வாழும் அனைவருமே, இம்மக்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளோம் என்றும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

நவம்பர் 30 முதல், டிசம்பர் 2 முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்களாதேஷ் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து, டாக்கா உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரும், பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஆயர் தியோடோனியுஸ் கோமஸ் (Theotonius Gomes) அவர்கள், ஃபீதேஸ் செய்திக்கு அளித்த பெட்டியில் இவ்வாறு கூறினார்.

ஓர் ஆன்மீகத் தலைவர் என்ற முறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் நாட்டுக்கு வருகை தந்தாலும், அரசியல் தலைவர்களையும், வேறு மதத்தலைவர்களையும் தன் சொல்லாலும், செயலாலும் கவர்ந்துள்ளார் என்பதில் ஐயமேதுமில்லை என்று ஆயர் கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ரொகிங்கியா பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும், திருத்தந்தை, தனிப்பட்ட முறையில் சந்தித்தது, அனைவர் மனதிலும் ஆழப்பதிந்த ஓர் அனுபவம் என்று கூறிய ஆயர் கோமஸ் அவர்கள், இம்மக்களுக்குப் பணியாற்றுவதில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற உணர்வையும் திருத்தந்தை தந்தார் என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.