2017-12-11 15:40:00

இறைவனால் ஆறுதல்படுத்தப்பட நம்மையே நாம் கையளிப்போம்


டிச.11,2017. புகார்களிலும் மனக்குறைகளிலும் தங்களை இழந்துவிடாமல், இறைவனால் ஆறுதல்படுத்தப்பட உங்களை கையளியுங்கள் என இத்திங்களன்று காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இத்திங்களின் முதல் வாசகமான எசாயா நூல் பகுதி எடுத்துரைக்கும், ஆண்டவரின் ஆறுதல் வாக்குறுதிகள் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நமக்கு ஆறுதல் வழங்க இறைவன் வந்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், 'இயேசுவின் ஆறுதல் பணியைப் பற்றி தியானிப்பது சிறந்தது' என்று கூறிய புனித லொயோலா இஞ்ஞாசியாரின் வார்த்தைகளையும்  மேற்கோள் காட்டினார்.

மற்றவர்களுக்கு ஆறுதல் வழங்குவதைவிட, ஆறுதலடைவது என்பது மிகவும் சிரமமான ஒன்று என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, பலர் தங்கள் எதிர்மறை எண்ணங்களிலும், பாவக்காயங்களிலும் நிலைத்திருக்கவும், அதிலிருந்து எழும்பிவர மறுத்தும் வருகின்றனர் என்பதால், ஆறுதலடைவது என்பது சிரமமாக உள்ளது என்றார்.

கசப்புணர்வுகளும், புகார்களும் தங்கள் செல்வம் என எண்ணி வாழும் மக்கள், தங்கள் சுயநல எண்ணங்களை முற்றிலுமாக நீக்கும்பொழுது மட்டுமே இறைவனின் ஆறுதலைப் பெறுவதற்கு தயாராக முடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.