2017-12-13 15:24:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 4


டிச.13,2017.  கீழை உரோமைப் பேரரசராக, வாலென்ஸ் (Valens 364-378) அவர்கள், கி.பி. 364ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். இவர் ஆரியுசின் தப்பறைக் கொள்கையை தீவிரமாக ஆதரித்தார். இதனால், ஆயர் யுசேபியுஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில், புனித பேசில், ஊருக்கு வெளியே துறவறம் மேற்கொண்டுவந்த ஆதீனத்திலிருந்து,    செசாரியாவுக்குத் திரும்பினார். ஆயருக்கு சிறந்த ஆலோசகராக, நேர்மையான பிரதிநிதியாக, இறைவார்த்தையை மிகச் சிறப்பாகப் போதிப்பவராக, வயதான முதியோர்க்கு ஊன்றுகோலாக, திருஅவையின் உள்விவகாரங்களில் விசுவாசமுள்ள   ஆதரவாளராக, வெளிவிவகாரங்களில் ஊக்கமுடன் செயல்படுபவராக விளங்கினார் புனித பேசில் என்று, புனித கிரகரி எழுதி வைத்துள்ளார். புனித பேசில், ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் காலையும் மாலையும் ஆற்றும் மறையுரைகளைக் கேட்பதற்கு மக்கள் திரண்டு வந்தனர். புனித பேசில் அவர்களே, திருவழிபாட்டை எழுதினார். “படைப்பின் ஆறுநாள்கள் (Hexaemeron)”, இறைவாக்கினர் எசாயா நூலின் 16 பிரிவுகள் பற்றிய விளக்கம், திருப்பாடல்கள் பற்றிய நூல், துறவற ஆதீன விதிமுறைகள் போன்றவற்றை எழுதினார். முக்கியமாக, ஆரியனிசக் கொள்கையைப் போதித்த Eunomius என்பவருக்கு எதிராக மூன்று நூல்களை எழுதினார். கைவிடப்பட்டவர்களைப் பராமரிப்பதற்கும், அந்நியர்களை ஏற்பதற்கும், கன்னிப் பெண்களைப் பாதுகாப்பதற்கும் விதிமுறைகளை எழுதினார். அருள்பணியாளர்களின் வாழ்வுமுறையை சீரமைத்து, அவர்கள் ஆர்வமுடன் மறைப்பணியாற்றும் மனப்பக்குவத்தை அமைத்துக் கொடுத்தார். ஏழைகளுக்கு மருத்துவமனைகளைக் கட்டிக் கொடுத்தார். ஆரியனிசக் கோட்பாட்டுப் போதனையால் மக்களின் கிறிஸ்தவ விசுவாசம் தளர்ச்சியுற்றிருந்தது. எனவே பல்வேறு ஆயர்கள், தங்கள் மறைமாவட்டங்களில் திருப்பணியாற்றுவதற்காக, புனித பேசிலை அழைத்தனர். செசாரியா ஆயர் யுசேபியுஸ் இறந்ததும், கி.பி.370ம் ஆண்டில் புனித பேசிலை, விசுவாசிகள் ஆயராக்கினார்கள்.

பேரரசர் வாலென்ஸின் வெளியுறவு அரசு நிர்வாகம், ஆரியுஸ் ஆதரவாளர்களிடம் இருந்தது. ஆரியனிசக் கொள்கையாளர்கள், இறைமகன் இயேசுவின் இறைத்தன்மை பற்றி பல்வேறு கருத்துக்களைக் கொண்டு, பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருந்தனர். இவர்கள், கிறிஸ்தவப் போதனைகளை, அறிவுப்பூர்வமான கொள்கைகளால், மெய்யியல் வடிவில் ஆரியுஸ் கோட்பாடு என, மக்களுக்கு வழங்கி வந்தனர். இவர்களின்  இறையியல் கோட்பாடுகள், தூய ஆவியார் பற்றிய கேள்விகளையும் எழுப்பின. இதனால், புனித பேசில், தான் எழுதிய, “யுனோமியோசுக்கு எதிராக (Against Eunomios)” என்ற நூல்களில், தூய ஆவியாரின் இறைத்தன்மை பற்றியும், தூய ஆவியார், இறைத்தந்தையோடும், இறைமகனோடும் சரிசமமாக இருக்கின்றார் என்பது பற்றியும் விரிவாக எழுதினார். அவற்றை அவர் போதித்தார். மேலும், இவ்விவகாரத்தில், திருஅவையின் மரபுசார்ந்த போதனைக்கு முழுவிளக்கம் அளிப்பதற்கு, இக்கோனியம் ஆயர் Amphilochiusன் வேண்டுகோளின்பேரில், தூய ஆவியார் பற்றி நூல் ஒன்றையும் எழுதினார், செசாரியா ஆயரான புனித பேசில். இவரது அரிய போதனைகள் மற்றும் செயல்களால், இவர் வாழும்போதே, பெரிய பேசில் என அழைக்கப்பட்டார். இவ்வளவு பெரிய அறிவாளி மற்றும் ஆன்மீகப் போதகரான புனித பேசில், பல்வேறு சூழல்களில் இன்னல்களையும் எதிர்கொண்டார். கப்பதோக்கியா இரு மாவட்டங்களாகப் பிரிந்தது, அந்தியோக்கியாவில் இரண்டாவது ஆயரைத் திருநிலைப்படுத்தியபோது எழுந்த பிரிவினை, ஆரியுஸ் பக்கம், செபஸ்தே ஆயர் யுஸ்தாத்தியுஸ் சாய்ந்தது, (Eustathius of Sebaste), ஆரியனிசப் பிரச்சனையில் மேற்கத்திய ஆயர்களை ஈடுபடுத்த எடுத்த முயற்சி போன்ற பல இன்னல்களை எதிர்க்கொண்டார் பேசில். எனினும், கிறிஸ்தவக் கோட்பாடுகளில் உறுதியாயிருந்து, அவற்றில் மக்களை ஊக்கப்படுத்தினார். உலகில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், தனியாள்கள் ஆகியோருக்குக் கடிதங்கள் எழுதினார். புனித பேசில், தனது பேச்சாற்றலாலும், எழுத்துக்களாலும் ஆரியத் தப்பறைக் கொள்கையாளர்களைத் தோற்கடித்தார். திருஅவையின் பகைவர்களைக் கொட்டும் தேனீக்களுக்கு ஒப்பிட்டுப் பேசப்படும் புனித பேசில், தனது போதனைகளால், தன் மக்களை, சுவையான தேனால் ஊட்டமளித்தவர் என்று போற்றப்படுகிறார்.

பேரரசர் வாலென்ஸ், தன் விருப்பப்படி நடக்காத ஆயர்களை, இரக்கமின்றி நாடு கடத்தி, ஆரியனிசம், ஆசியா மைனரின் ஏனைய மாநிலங்களிலும் வேருன்றச் செய்தான். ஆரியனிசத்தை கப்பதோக்கியாவில் பரப்புவதற்காக, தனது பிரதிநிதி Modestus என்பவரை புனித பெரிய பேசிலிடம் அனுப்பினான், பேரரசர் வாலென்ஸ். சொத்துக்களைப் பறிமுதல் செய்து, நாடு கடத்தி, அடித்து கொலை செய்வதாகவும் அச்சுறுத்தினான் Modestus. அப்போது புனித பேசில், அவனிடம், கிழிந்த ஆடையும், சில நூல்களுமே என்னிடம் சொத்துக்களாக உள்ளன. இவற்றை நீ எடுத்தால் பயனேதும் இருக்காது. நான் எந்த ஓர் இடத்திற்கும் உரியவன் அல்ல. நாடு கடத்தப்படுவது பிரச்சனையே இல்லை என்றார். இதைக் கேட்ட அந்தப் பிரதிநிதி, இதுவரை இவ்வளவு துணிச்சலுடன் யாரும் பேசியதே கிடையாது என்று அதிர்ந்து நின்றான். அதற்கு புனித பேசில், நீ எந்த ஆயரிடமும் இதற்குமுன் பேசியது இல்லை. நாங்கள் சாந்தமும், மிகவும் தாழ்ச்சியும் உள்ளவர்கள். நெருப்போ, வாளோ, இரும்புத் தடிகளோ, கொடிய விலங்குகளோ எதுவும் எங்களை எதுவும் செய்ய முடியாது என்றார். இதைப் பேரரசர் வாலென்சிடம் முறையிட்ட அந்தப் பிரதிநிதி, நாம் திருஅவையின் தலைவரிடம் தோற்றுப்போய் நிற்கிறோம் என்றான். ஆயினும், புனித பேசில் நாடுகடத்தப்பட வேண்டுமென்ற ஆரியனிசக் கொள்கையாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார் பேரரசர். இறைவனின் திருக்காட்சி விழா அன்று, பேரரசர் வாலென்ஸ் ஆலயத்திற்குள் நுழைந்தபோது, விசுவாசிகள் அவரைக் கண்டுகொள்ளாமல், பக்தியுடன் தங்கள் செபங்களையும், பாடல்களையும் தொடர்ந்து கொண்டிருந்தனர். புனித பேசில் தன் திருப்பணியைப் பக்தியுடன் நடத்திக்கொண்டிருந்தார். இவ்வாறு எவருக்கும் அஞ்சாது இறைப்பணியைத் துணிச்சலுடன் ஆற்றிவந்த புனித பேசில், கி.பி.379ம் ஆண்டு சனவரி முதல் நாள் தனது 49வது வயதில் காலமானார். இவர் திருஅவையின் வல்லுனர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.