2017-12-30 15:09:00

அமைதிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மைக்கு இடமளிப்போம்


டிச.30,2017. “அமைதிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மைக்கும், செயல்களுக்கும் இந்நாள்களில் இடமளிப்போம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டின் இறுதி நாளாகிய, இஞ்ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நன்றி வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்.

இவ்வழிபாட்டில், இறைவனின் அன்னை பெருவிழா திருவிழிப்பு மாலை வழிபாடும், திருநற்கருணை ஆராதனையும், தே தேயும் நன்றிப் பாடலும் இடம்பெறும்.

இவ்வழிபாட்டிற்குப் பின்னர், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகிய குடிலுக்குச் சென்று செபிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 2018ம் ஆண்டு சனவரி 01, திங்கள் காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இறைவனின் அன்னை பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் நிகழ்த்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 01, திங்களன்று, ‘புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் : அமைதியைத் தேடும் ஆண்களும் பெண்களும்’ என்ற தலைப்பில், 51வது உலக அமைதி நாளை, திருஅவை சிறப்பிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.