2018-01-09 11:52:00

நம் எடுத்துக்காட்டுகள் வழி இயேசுவின் சீடர்களாகும் குழந்தைகள்


சன.08,2018. கடந்த காலத்தின் ஒரு நிகழ்வு என்பதாக நோக்காமல், நம் திருமுழுக்கை, விசுவாசிகளின் பிணைக்கும் அடையாள அட்டையாக நோக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் திருமுழுக்கு விழாவான இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 34 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அளித்த திருப்பலிக்குப்பின், தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள், தங்கள் பெற்றோர், மற்றும், ஞானப் பெற்றோர் காட்டும் எடுத்துக்காட்டுக்களின் உதவியுடன் இயேசுவின் சீடர்களாக வளர்கின்றனர் என்றார்.

பாவமே புரியாத இயேசு, பாவிகளின் வரிசையில் நின்று திருமுழுக்கைப் பெற்றது, அவரின் தாழ்ச்சியை வெளிப்படுத்துவதாக உள்ளது என்ற திருத்தந்தை, திருமுழுக்கின் ஆதி காரணமான தூய ஆவியானவர், உண்மைக்கு நம் இதயத்தின் கதவுகளை திறப்பதுடன், நம்மை பிறரன்பின் பாதையில் வழி நடத்தி, நமக்கு தெய்வீக மன்னிப்பை வழங்கி, நமக்கு கொடையாக வருகிறார் என்றார்.

நமக்கு எதிராக பாவம் புரிந்தவர்களை மன்னிக்கவும், அன்புகூரவும், ஏழைகளின் முகங்களில் இயேசுவைக் காணவும் உதவும் நம் திருமுழுக்கு, நம்மைப் பிணைக்கும் கிறிஸ்தவ அடையாள அட்டையாக உள்ளது என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.