2018-01-15 14:36:00

இமயமாகும் இளமை : தன் வயதினருக்கு வாழ வழிகாட்டும் இளம்பெண்


கடும்குளிர் வாட்டுகின்ற இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மிகவும் ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில், இனிய குரலில் மெல்லிசையுடன், அழகுமிகுந்த கலைநயத்தோடு கம்பள விரிப்புகளை நெய்து கொண்டிருக்கிறார், 24 வயது நிரம்பிய உஸ்மா முக்டார் (Uzma Mukhtar). இளம்பெண் உஸ்மாவுக்கு 18 வயது நடந்தபோது, குடும்ப வறுமை காரணமாக அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. எனவே தனது பெற்றோரையும், இரு தங்கைகளையும் காப்பாற்றுவதற்கு, படிப்பைக் கைவிட்டு, புகழ்பெற்ற காஷ்மீர் கம்பளம் நெய்யும் வேலையைக் கற்கத் தொடங்கினார். ஏறத்தாழ ஒரு மாதத்தில், பயிற்சியாளரே வியக்கும்முறையில் வேலையைச் சிறப்பாகக் கற்றார் உஸ்மா. “aar” எனப்படும் மிக நுணுக்கமான ஊசியை வைத்து, ஒரு கம்பளம் நெய்ய, உஸ்மாவுக்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறதாம். இதற்கு இவர் பெற்றது வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே. மீதிப்பணம், இடைத்தரகர்களின் பைகளை நிரப்பியது. இதனால் மாதம் ஆயிரம் ரூபாய்க்குமேல் உஸ்மாவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த செப்டம்பரில், ஜம்மு-காஷ்மீர் கத்தோலிக்க சமூகநல மையம், இளம்பெண் உஸ்மாவின் கிராமத்தில் நடத்திய விழிப்புணர்வு முகாமில் உஸ்மாவும் கலந்துகொண்டார். இந்த மையத்தின் உதவியுடன், இப்போது, இடைத்தரகர் யாருமின்றி நேரடியாக கம்பள விற்பனையாளர்களோடு தொடர்புகொண்டுள்ளார் உஸ்மா. இதனால் ஒரு கம்பளத்திற்கு குறைந்தது 1,500 ரூபாய்வரை கிடைக்கின்றதாம். தான் பெற்ற பலனை தன்னோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது கிராமத்திலுள்ள, Saima Jan, Afroza போன்ற பல்கலைக்கழக இளம் பெண்களுக்கும், கம்பளம் நெய்யும் கலை நுணுக்கத்தைக் கற்றுக்கொடுத்து, அவர்கள் வாழ்விலும் விளக்கேற்றி வருகிறார் உஸ்மா. சைமா, கம்பளம் நெய்து, பத்துப்பேர் கொண்ட தன் குடும்பத்திற்கு உதவி வருகிறார்.

காஷ்மீரில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கம்பளக் கலைத்தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் 19 விழுக்காட்டினர் பெண்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 58 விழுக்காட்டினர் கம்பளங்கள் நெய்யும் தொழிலைச் சார்ந்து வாழ்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.