2018-01-18 15:54:00

சிலே கத்தோலிக்க பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை


சன.18,2018. மைப்பூ கார்மேல் அன்னை மரியா திருத்தலத்தில் இளையோரைச் சந்தித்த பின்னர், சந்தியாகோ நகர் கத்தோலிக்க பாப்பிறை பல்கலைக்கழகம் சென்று, ஏறத்தாழ 2,400, மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பல்கலைக்கழகம், 1888ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி, அப்போதைய சந்தியாகோ பேராயர் மரியானோ காசானோவா என்பவரால் கட்டப்பட்டது. ஆரம்பம் முதலே, திருப்பீடத்திற்கும், இப்பல்கலைக்கழகத்திற்குமிடையே உறவு இருந்தாலும், 1930ம் ஆண்டு பிப்ரவரியில் திருத்தந்தை 11ம் பயஸ், இப்பல்கலைக்கழகத்தை திருஅவை சட்டப்படி அங்கீகரித்தார். அதற்குப் பிறகு 1935ம் ஆண்டில் இறையியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இப்பல்கலைக்கழகம், பாப்பிறை பல்கலைக்கழகம் எனவும் அழைக்கப்படலானது. இன்று, இப்பல்கலைக்கழகத்தில், இறையியல் முதல் அனைத்துப் பாடங்களும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இங்கு நடந்த சந்திப்பில், தலை, இதயம், கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுங்கள் என்று பல்கலைக்கழகத்தாரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. பின்னர், சந்தியாகோ திருப்பீட தூதரகம் சென்று, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் சனவரி 17, இப்புதன் தின பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.  

சனவரி 18, இவ்வியாழன் காலை 7 மணிக்கு, சந்தியாகோ திருப்பீட தூதரகத்திலிருந்து அந்நகர் விமானப்படை விமானத்தளம் சென்று, Latam 1252b விமானத்தில் Iquique நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த விமானப் பயணத்தில், 41 வயது நிரம்பிய Carlos Cuffando Elorriaga, 39 வயது நிரம்பிய Paula Podestà Ruiz ஆகிய இரு விமானப் பணியாளர்களுக்கு, திருமணம் செய்து வைத்தார் திருத்தந்தை. விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது இந்த நிகழ்வு நடந்தது. Iquique நகரில், சகோதரத்துவம் என்ற தலைப்பில், திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. பின்னர் பெரு நாட்டுக்குப் புறப்படுவது திருத்தந்தையின் இவ்வியாழன் பயணத் திட்டத்தில் உள்ளது.  

“நாங்கள் எல்லாரும் ஒன்றாய் இருக்குமாறு, நாங்கள் ஒன்றிப்பை ஏற்படுத்துபவர்களாக வாழுமாறு என்று, சகோதரரே, இவ்வுலகின் பிள்ளைகளுக்காக, அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்காக, இயேசுவோடு சேர்ந்து இறைத்தந்தையிடம் சொல்வோம்”என்ற வார்த்தைகளையும், இவ்வியாழனன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மனிதர் அனைவரும் ஒற்றுமையாய் வாழச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.