2018-01-24 15:29:00

வறியோரை ஒதுக்கிவைக்கும் திட்டம், வன்முறையை வளர்க்கும்


சன.24,2018. முன்னேற்றம் என்பது, பொருள் திரட்டுவதில் அடங்கியிருப்பதில்லை, மாறாக, அது, முழு மனித குலத்தின் வளர்ச்சியில் அடங்கியுள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டுக் கருத்தரங்கில் உரை வழங்கினார்.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனமான OSCE, சனவரி 22, 23 ஆகிய இருநாள்கள், வியென்னாவில் நடத்திய ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், மனிதர்களை மையப்படுத்திய முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம் என்ற கருத்தில் உரையாற்றினார்.

உண்மையான சமுதாய முன்னேற்றத்தை மறந்துவிட்டு, பொருளாதாரத்தை மட்டும் முன்னேற்றும் முயற்சிகள், ஒரு சமுதாயத்திற்கு ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்று, அருள்பணி Urbańczyk அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

மனிதர்களை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் முன்னேற்றத்தில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை, சம ஊதியம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்று, அருள்பணி Urbańczyk அவர்கள் விண்ணப்பித்தார்.

வறியோரை முற்றிலும் ஒதுக்கிவைத்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு திட்டமும், வன்முறைகளை வளர்க்கும் விளைநிலமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்று அருள்பணி Urbańczyk அவர்கள், தன் உரையில் எச்சரிக்கை விடுத்தார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.