2018-01-30 15:06:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 2


கானா திருமணத்தில், இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றிய புதுமை, புனித யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள பொருள் செறிந்தப் புதுமை. இப்புதுமையில் நம் தேடல் பயணத்தை சென்ற வாரம் ஆரம்பித்தோம். இப்புதுமையின் அறிமுக வரிகளை, மீண்டும் ஒருமுறை கேட்போம்:

யோவான் 2: 1-3

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார்.

பொதுவாக, எந்த ஒரு கதையிலோ, வரலாற்றிலோ ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வேளையில், அவரைப் பற்றிய பல விவரங்கள் வழங்கப்படும். இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய மரியாவை, புனித யோவான் தன் நற்செய்தியில் முதன்முதலாக அறிமுகம் செய்யும்போது, இயேசுவின் தாயும் அங்கு இருந்தார் என்ற எளிய சொற்களில் இந்த அறிமுகத்தைச் செய்கிறார். அந்தத் தாயின் பெயரையும் அவர் பதிவு செய்யாமல், 'இயேசுவின் தாய்' என்ற அடைமொழியை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

கத்தோலிக்கப் பாரம்பரியத்தில், மரியாவின் 'கன்னிமை', 'தாய்மை' என்ற இரு அம்சங்கள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில், மரியாவின் 'கன்னிமை'யைச் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், (மத். 1:18-24), லூக்காவும் (லூக். 1:26-38) கூறியுள்ளனர். மரியாவின் 'தாய்மை'யை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை, யோவான் குறிப்பிட்டுள்ளார். 20 பிரிவுகளையும், பிற்சேர்க்கையான 21ம் பிரிவையும் கொண்ட யோவான் நற்செய்தியில், இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே 'இயேசுவின் தாய்' இடம்பெறுகிறார். ஒன்று, கானா திருமணம் (யோவான் 2:1-11); மற்றொன்று, கல்வாரி மலை நிகழ்வுகள் (யோவான் 19:25-27).

கானா திருமணத்தில், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பிக்கும் வகையில், முதல் 'அரும் அடையாளத்தை' நிறைவேற்றிய வேளையில், "இயேசுவின் தாய் அங்கு இருந்தார்". அதுமட்டுமல்ல, அந்த அரும் அடையாளத்தை இயேசு செய்வதற்கு, அவரே தூண்டுதலாகவும் இருந்தார். அதே வண்ணம், தன் பணிவாழ்வின் இறுதியில், கல்வாரி மலைமீது, சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது, "சிலுவை அருகில் இயேசுவின் தாய்... நின்றுகொண்டிருந்தார்" (யோவான் 19:25).

அன்னை மரியாவின் பிரசன்னம், அற்புதங்கள் நடைபெற தூண்டுதலாகவும், துன்ப வேளைகளில், ஆறுதல் தரும் அருமருந்தாகவும் உள்ளது என்பதை, இவ்விரு நிகழ்வுகள் வழியே நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார். 20 நூற்றாண்டுகளாக, உலகெங்கும் மரியன்னையின் பரிந்துரையால், அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன, ஆறுதல் கிடைத்துள்ளது என்பதற்கு, பல கோடி பக்தர்களே சான்றுகள்.

கானா திருமண விழாவுக்குத் திரும்புவோம். அங்கு, "இயேசுவின் தாயும் இருந்தார்" என்று எளிய சொற்களில் கூறப்பட்டிருப்பது, மரியாவின் சிறப்பானதொரு குணநலனை நம்முள் ஆழப் பதிக்கிறது. எங்கெல்லாம் தன் உதவி தேவை என்று அன்னை மரியா உணர்கிறாரோ, அங்கெல்லாம் எவ்வித அழைப்பும் இல்லாமல் சென்று, அவர்களோடு தங்கி, உதவி செய்வது, அவரது தனிப்பட்ட குணம்.

தான் இறைவனின் தாயாகப் போகிறோம் என்ற உன்னதச் செய்தியை, வானதூதர் வழியே கேள்விப்படுகிறார், இளம்பெண் மரியா. (லூக்கா 1:26-35) அந்தச் செய்தியை வழங்கிய வானதூதர் கபிரியேல், மற்றொரு செய்தியையும் பின்குறிப்பாக இணைக்கிறார். அதுதான், மரியாவின் உறவினரான எலிசபெத்து, தன் முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தி (லூக்கா 1:36). தான் இறைவனின் தாயாகப் போகும் செய்தியைவிட, இந்தச் செய்தி மரியாவுக்கு முக்கியத்துவம் நிறைந்ததாக மாறுகிறது. எனவே, "மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்" (லூக்கா 1:39-40) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார். அதேபோல், கானாவில் திருமணம் ஒன்று நிகழப்போகிறது என்பதை அறிந்ததும், திருமண வீட்டாரின் பல தேவைகளை நிறைவு செய்ய, திருமணத்திற்கு முன்னரே இயேசுவின் தாய் அங்கு சென்றுவிட்டார் என்பதைக் கூறவே, இயேசுவின் தாயும் அங்கு இருந்தார் என்ற எளிய சொற்களில் புனித யோவான் அன்னை மரியாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.  

நற்செய்தியாளர் யோவான் தரும் அடுத்த குறிப்பு: "இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்" (யோவான் 2:2) என்பது. இந்தக் குறிப்பு, இயேசுவின் குணநலன்களைக் குறித்து ஒரு சில பாடங்களைச் சொல்லித்தருகிறது.

இயேசுவுடன் வாழ்வது, சலிப்பூட்டும் கடும் தவ வாழ்வு அல்ல; மாறாக, சாதாரண, எளிய மனித மகிழ்வுகளை முழுமையாகத் தரக்கூடிய ஒரு வாழ்வு என்பது, நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம். இயேசு, மகிழ்வுக்கு முட்டுக்கட்டை போடும் முனிவர் அல்ல; மாறாக, மனித மகிழ்வை இரட்டிப்பாக்கும் கலையை அறிந்தவர் என்பதாலேயே திருமண விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திருமண விழாவுக்கு ஒருவரை அழைப்பதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கும். நெருங்கிய உறவுகள், நண்பர்கள் ஆகியோர், திருமணத்திற்கு அழைக்கப்படும் முதல் குழுவில் இருப்பர். அடுத்ததாக, ஊரில் முக்கியமானவர்கள் சிலர், அழைப்பு பெறலாம்.

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரை, இயேசுவும், அவருடன் இருந்தோரும் அதுவரை எவ்வகையிலும் புகழ் பெற்றவர்கள் அல்ல; எனவே, அவர்கள், திருமண வீட்டாருக்கு நெருக்கமானவர்கள் என்பதே அவர்கள் அழைப்பு பெற்றதற்கு காரணம் என்பதை புனித யோவான் சொல்லாமல் சொல்கிறார். நட்பு, உறவு என்பனவற்றை இயேசு பெரிதும் மதித்ததால், அவர் அந்த அழைப்பை ஏற்று, திருமணத்தில் கலந்துகொண்டார்.

யூதத் திருமணங்கள், ஒரு நாளில், ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் சடங்கு அல்ல. அது, பொதுவாக, ஒரு வாரம் நீடிக்கும் உறவுகளின் திருவிழா. எனவே, இயேசுவும், சீடர்களும் ஏழு நாள்கள் கானாவில் தங்கி, அந்த உறவுத் திருவிழாவில் மகிழ்ந்திருந்தனர் என்பதை உணரும்போது, மனித உறவுகளுக்கு, இயேசு தனியொரு இடத்தைத் தந்தார் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

ஒரு திருமண விழாவில் இயேசு தன் முதல் அரும் அடையாளத்தை செய்தார். இயேசு தன் புதுமைகள் வழியே சுய விளம்பரத்தைத் தேடிய மனிதர் என்றால், எருசலேம் கோவிலில், மக்கள் கூடியிருந்த வேளையில், தன் முதல் புதுமையைச் செய்திருக்கலாம். அத்தகைய ஒரு வாய்ப்பை அலகை அவருக்கு உருவாக்கித் தந்தது. எருசலேம் கோவில் கோபுரத்திலிருந்து இயேசு குதித்தால், அவரை, கடவுளின் தூதர்கள் தாங்கி நிற்பர், அதைக் காணும் மக்கள் மலைத்து நிற்பர் என்ற விளம்பரச் சோதனையை, அலகை இயேசுவுக்குத் தந்தது (மத்தேயு 4:5-7; லூக்கா 4:9-12). அத்தகைய விளம்பரச் சோதனையை விரட்டியடித்த இயேசு, ஓர் எளிய திருமண விழாவில், தன் முதல் புதுமையைச் செய்தார். அதுவும், பந்தி மேற்பார்வையாளருக்கும் தெரியாத வண்ணம் (யோவான் 2:9) இயேசு அமைதியாக அப்புதுமையைச் செய்தார்.

மனிதர்களின் ஒவ்வொரு நாள் வாழ்வில் புதுமைகள் நிகழ்வதையே இயேசு விரும்புகிறார்; அத்தகையப் புதுமைகளை அவர் தொடர்ந்து இன்றும் செய்து வருகிறார் என்பதை கானா திருமண நிகழ்வு நமக்குச் சொல்லித் தருகிறது.

கானா திருமணத்தில் இயேசுவின் தாய், இயேசு மற்றும் சீடர்கள் கலந்துகொண்டனர் என்று கூறும் நற்செய்தியாளர் யோவான், அடுத்து, அங்கு ஏற்பட்ட ஒரு குறையைப் பற்றி பேசுகிறார்.

குறையில்லாத திருமணங்கள் உலகத்தில் எங்கும் இல்லை. திருமணங்களில் பெரும்பாலும் சாப்பாட்டு நேரங்களில் தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும், பிரச்சனைகள் வெடிக்கும். கானாவிலும் சாப்பாட்டு விடயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின் வைபவங்களில், சிறப்பாக திருமணங்களில், திராட்சை இரசம் தீர்ந்து போவதென்பது பெரிய மானப் பிரச்சனை.

திருமணங்களில் குறைகள் ஏற்படும்போது, அவற்றைப் பகிரங்கப்படுத்தி, பெரிதாக்கி, வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார்.

யோவான் 2: 3

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார்.

நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள இந்த இறை வாக்கியத்தில் பொதிந்துள்ள எண்ணங்களை நம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.